ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் ரோகித் - சுப்மன்கில் ஜோடி அபாரமாக ஆடி அரைசதம் விளாசினர். இவர்கள் இருவரும் அவுட்டானதை தொடர்ந்து கே.எல்.ராகுல் - விராட் கோலி ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தது. 


ரிசர்வ் டே-விலும் தாமதம்:


ஆனால், மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் மழையை கொட்டித் தீர்த்ததால் நேற்றைய போட்டி தடைபட்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வந்த நிலையில் நிறுத்தப்பட்ட ஆட்டம், ரிசர்வ் டே வான இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றும் கொழும்பில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறுமா? கைவிடப்படுமா? என்ற குழப்பத்திலே ரசிகர்கள் உள்ளனர். 


ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதல் இலங்கையில் நடைபெற்று வரும் அத்தனை போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் கடும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்.


அவுட்ஃபீல்ட் ஈரம்:


சூப்பர் 4 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரசிர்வ் டேவான இன்றும் மழை பெய்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியிலே உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, மழை நின்று அவுட்ஃபீல்ட் மட்டும் இன்னும் ஈரமாக உள்ளது. அதை உலரவைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஜோடி ஷாகின், நசீம்ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோரது பந்துவீச்சை அசத்தலாக அதிரடியாக அடித்த ஆடினர். இதனால், இந்திய பேட்டிங் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்தது.


சாதகமா? பாதகமா?


இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று நடக்கும் போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆட்டத்தை விராட்கோலி – கே.எல்.ராகுல் இருவரும் தொடங்குவார்கள். இன்னும் 25 ஓவர்கள் இருப்பதாலும் இந்திய அணி ஏற்கனவே 147 ரன்களை எடுத்துள்ளதால் இந்திய பேட்ஸ்மேன்கள் பதற்றமின்றி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக ஆடியதால் இன்று புதிய வியூகத்தை வகுத்திருப்பார்கள். எஞ்சிய 25 ஓவர்களில் இந்தியாவை கட்டுப்படுத்துவது எப்படி? என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். மழை பெய்துள்ளதால் மைதானம் இனி பேட்டிங்கிற்கு சாதகமாக அமையுமா? பவுலிங்கிற்கு சாதகமாக அமையுமா? என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


நேற்றைய ஆட்டத்தில் ஷாகின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியதால் இன்று அவர் கூடுதல் எச்சரிக்கையுடனே பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பு ஆட்டத்தை காட்டிலும் தாக்குதல் ஆட்டமே இந்திய அணிக்கு கைகொடுப்பதால் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க: Watch Video: 'யாருமே செய்யாத ஒன்னு..' ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரிலே சிக்ஸர்.. அரிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா..!


மேலும் படிக்க: Rohit Sharma: தொடக்க வீரராக 300வது சர்வதேச போட்டி.. ரெக்கார்டில் கெத்து காட்டும் ரோஹித் சர்மா..!