ஆசிய கோப்பை 2023 நேற்று தொடங்கிய நிலையில், குரூப் ஏ தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகள் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதே குழுவில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகியவை குரூப் பியில் இடம் பெற்றுள்ளன. 1984 இல் தொடங்கிய ஆசிய கோப்பை போட்டிகளின் 16வது பதிப்பு இதுவாகும். இதுவரை இதில் இரண்டு பதிப்புகள் மட்டும் 20 ஓவர் வடிவத்தில் (2016 மற்றும் 2022) விளையாடப்பட்டுள்ளன. மீதமுள்ள போட்டிகள் 50 ஓவர் வடிவத்தில் விளையாடப்பட்டுள்ளன. இம்முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. 2023 ஆசிய கோப்பை தொடக்க போட்டிக்கு முன்னதாக, இதில் நிகழ்த்தப்பட்டுள்ள 10 முக்கிய தனித்துவமான சாதனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஜெயசூர்யா - சங்கக்காரா
ESPNcricinfo இன் படி, ஆசிய கோப்பையில் (ODI) 1000-க்கும் அதிகமான ரன்களை எடுத்த ஒரே வீரர்கள் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான்களான சனத் ஜெயசூர்யா மற்றும் குமார் சங்கக்கார மட்டுமே. 1990-2008 வரை, ஜெயசூர்யா ஆசியக் கோப்பையில் 25 போட்டிகளில் பங்கேற்று 53.04 சராசரியில் 1220 ரன்கள் எடுத்தார். 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடிய வீரர்களில் அவரது சராசரியே சிறந்தது. அதேசமயம், சங்கக்கார 48.86 சராசரியில் 1075 ரன்கள் எடுத்துள்ளார். ஜெயசூர்யா ஆசிய கோப்பையில் 6 சதங்களுடன் அதிக சதம் அடித்தவர் என்னும் சாதனையும் வைத்துள்ளார். நான்கு சதங்கள் அடித்து சங்ககரா அடுத்த இடத்தில் உள்ளார்.
அதிக விக்கெட்டுகள்
பந்துவீச்சிலும் இலங்கை அணிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசியக் கோப்பை வரலாற்றில் முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா, அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக உள்ளனர். முரளிதரன் 28.83 சராசரியில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து மலிங்கா 14 ஆட்டங்களில் 20.55 சராசரியில் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கிடையில், மெண்டிஸ் வெறும் எட்டு போட்டிகளில் இருந்து 26 விக்கெட்டுகளை வீழ்த்தி 10.42 என்ற அற்புதமான சராசரி வைத்துள்ளார்.
350 ரன்களுக்கு மேல் அடித்த அணிகள்
2010ல் வங்கதேசத்துக்கு எதிராக 385/7 ரன் குவித்து, ஆசியக்கோப்பையின் ஒரே இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை குவித்த சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இந்திய அணி ஹாங்காங்கிற்கு எதிராக 374/4 எடுத்து. இலங்கை 2008 இல் வங்காளதேசம் அணிக்கு எதிராக 357/9 குவித்தது. 350 க்கும் அதிகமாக ஆசியக்கோப்பையில் குவிக்கப்பட்டது இந்த மூன்று முறை மட்டுமே.
பங்களாதேஷ் அணியின் மோசமான சாதனை
வங்காளதேசம் 100க்கும் குறைவான ஸ்கோர்களை மூன்று முறை பதிவு செய்துள்ளது. வேறு எந்த அணியும் இத்தனை முறை இதனை செய்யவில்லை. இலங்கை அணி ஒரே ஒரு முறை செய்துள்ளது. அதிலும் வங்கதேசத்தின் 87 ரன்கள் ஆசிய கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோராகும். 2000 ஆம் ஆண்டு டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணி குவித்த ஸ்கோர் இது.
கோஹ்லியின் 183
2012 ஆசியக் கோப்பைப் பதிப்பில், விராட் கோலி அசுர ஃபார்மில் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 330 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்திய போது, 183 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவர் 148 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 183 ரன்கள் எடுத்தார். ஆசியக் கோப்பை வரலாற்றில் 150 ரன்களைத் தாண்டிய ஒரே வீரர் கோலி மட்டுமே.
ஜெயசூர்யாவின் பவுண்டரி மழை
2008ல் கராச்சியில் வங்கதேசத்துக்கு எதிராக ஜெயசூர்யா 130 ரன்கள் எடுத்தார். அவர் 88 பந்துக்களை எடுத்துக்கொண்டாலும், வெறும் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களிலேயே 100 ரன்களை குவித்தார். அந்த நாக்கில் அவர் 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசினார். ஒரு இன்னிங்ஸில் பவுண்டரிகளில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கோலி 183 ரன்கள் குவித்த ஆட்டத்தில், 94 ரன்கள் பவுண்டரியில் வந்தது.
மலிங்காவின் தனித்துவமான சாதனை
ஆசிய கோப்பையில் இதுவரை ஒன்பது பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்தியுள்ளனர். அதில், ஐந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள். ஆசியக் கோப்பையில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்தியுள்ள மலிங்கா, இந்த சாதனையை மூன்று முறை செய்துள்ளனர். மெண்டிஸ் இரண்டு முறை செய்துள்ளார். வேறு எந்த பந்துவீச்சாளரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இதனை செய்ததில்லை.
2008 ஆசிய கோப்பையில் மெண்டிஸின் மேஜிக்
2008 ஆசிய கோப்பையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஒரே பதிப்பில் 15-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் இவர்தான். இந்த தொடரில் மெண்டிஸ் இரண்டு ஐந்து விக்கெட்டுகளையும், ஒரு நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
200 பார்ட்னர்ஷிப்
ஆசிய கோப்பையில் மொத்தம் ஏழு முறை 200-க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்புகள் அமைந்துள்ளன. அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆசிய கோப்பையில் இரு நாடுகளும் தலா மூன்று முறை 200-க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்புகளைக் கொண்டுள்ளன. நசீர் ஜாம்ஷெட் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக 224 ரன்களுடன் ஆசியக்கோப்பையின் சிறந்த பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்துள்ளனர். யூனிஸ் கான் மற்றும் சோயப் மாலிக் ஜோடி 223 ரன்கள் எடுத்தது இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் அஜிங்க்யா ரஹானே மற்றும் கோலி 213 ரன்களுடன் உள்ளனர்.
கேப்டன்சி சாதனைகள்
தோனி மற்றும் அர்ஜுன ரணதுங்கா ஆகியோர் ஆசிய கோப்பையில் கேப்டன்களாக அதிக வெற்றிகளை (9) பதிவு செய்துள்ளனர். குறைந்தது 10 ஆட்டங்கள் கேப்டன்சி செய்தவர்களில், மிஸ்பா-உல்-ஹக் 70% என்ற சிறந்த வெற்றி சதவீதத்துடன் முன்னிலையில் இருக்கிறார். பாகிஸ்தானின் மொயின் கான் கேப்டனாக 100% சாதனை படைத்துள்ளார், ஆனால் அவர் 6 ஆட்டங்களில் தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.