ஆசிய கோப்பை 2023 போட்டியானது நேற்று முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி பாகிஸ்தான் முழுவதும் நடைபெற இருந்த நிலையில் ஹைப்ரிட் மாடலில் தற்போது நடத்தப்படுகிறது. 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எப்போது மோதும் என்று இரு நாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில், தான் சிறுவயதாக இருக்கும்போது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சுவாரஸ்யமான தகவல் ஒன்றை குறித்து விராட் கோலி பகிர்ந்தார். தற்போது, அது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
2003 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரன்களை விரட்டியடித்தபோது, சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினார்.
அந்த போட்டியில் 98 ரன்கள் எடுத்திருந்த சச்சின் டெண்டுலகர் தனது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தார். அந்த சிக்ஸரும் அக்தர் பந்தில் அடித்தார். இதுகுறித்து பேசிய கோலி, “ சோயிப் அக்தர் பந்தில் சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்தபோது நான் உற்சாகத்தில் குதித்தேன்” என்றார்.
அன்றைய போட்டியில் சோயிப் அக்தர் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசினார். அதனை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கர் ஆக் சைட்டில் கட் செய்து சிக்ஸருக்கு அனுப்பினார். அதை பற்றியே இங்கு விராட் கோலி பேசினார்.
போட்டி சுருக்கம்:
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சயீத் அன்வர் 126 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்திய அணி சார்பில் ஜாகீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
274 ரன்களை விரட்டிய விரட்டிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 130.67 ஸ்டிரைக் ரேட்டில் 12 பவுண்டரிகள் , 1 சிக்ஸர் உதவியுடன் 98 ரன்கள் குவித்தார். இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸுக்காக சச்சினுக்கு 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது. டெண்டுல்கரைத் தவிர, யுவராஜ் சிங் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். மேலும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 76 பந்துகளில் 2 பவுண்டரிகள் உதவியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.