ஆசியக்கோப்பை போட்டிகள் டி20 மற்றும் ODI வடிவங்களில் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 2022 இல், இலங்கை டி20 வடிவத்தில் சாம்பியன் ஆனது. அந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பந்து வீச்சாளர்கள் இப்போதும் எதிரணியை கலங்கடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக்கோப்பை 2023
ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் வடிவத்தில் இம்முறை நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் ஆசிய அணிகளுக்கு உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை ஆடும் முன் எல்லா வீரர்களுக்கும் ஒரு பயிற்சி ஆட்டம் போலவும், ஃபார்மை மீட்டெடுக்கும் தளமாகவும் அமையும். இந்த அணியில் இருந்து பெரும்பாலும் பெரிய வித்தியாசங்கள் இல்லாமல் தான் அணிகள் உலகக்கோப்பையில் களமிறங்கும் என்று தெரிகிறது. எனவே இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆசியக்கோப்பை தொடரில் பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். இந்த நிலையில் டி20 வடிவத்தில் நடைபெற்ற கடந்த ஆசியக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களை பார்க்கலாம்.
புவனேஷ்வர் குமார்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார். அவர் 5 போட்டிகளில் விளையாடி 19 ஓவர்கள் வீசினார். அதில் 1 மெய்டன் ஓவரை வீசி மொத்தம் 115 ரன்களை விட்டுக்கொடுத்தார். 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 6.05 ஆக இருந்தது, சிறந்த பந்துவீச்சு 5/4. அவர் தற்போதைய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வனிந்து ஹசரங்கா
இலங்கையின் வனிந்து ஹசரங்கா 2வது இடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 23 ஓவர்கள் வீசினார். கொஞ்சம் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்த அவர், எதிரணிக்கு மொத்தம் 170 ரன்களை விட்டுக்கொடுத்தார், ஒரு மெய்டன் ஓவர் கூட வீசாமல் மற்ற வீரர்களை விட அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக இருந்தார். அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி 7.39 ஆகவும், சிறந்த பந்துவீச்சு 3/21 ஆகவும் இருந்தது.
முஹம்மது நவாஸ்
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 6 போட்டிகளில் விளையாடி 18.4 ஓவர்கள் வீசினார். அவர் மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 5.89. சிறந்த பந்துவீச்சு 3/5.
ஷதாப் கான்
சிறப்பாக பந்து வீசிய மற்றொரு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷதாப் கான். அவர் 5 போட்டிகளில் விளையாடி 18.4 ஓவர்கள் வீசினார். அவர் மொத்தமாக 113 ரன்களை விட்டுக் கொடுத்தார். 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 6.05. சிறந்த பந்துவீச்சு 4/8.
ஹாரிஸ் ரவுஃப்
மீண்டும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்தான் அடுத்த இடத்தில் உள்ளார். முதல் 5 இடங்களுக்குள் 3 இடங்களை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஹாரிஸ் ரவுஃப் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 20 ஓவர்கள் வீசினார். அவர் மொத்தமாக 153 ரன்களை விட்டுக் கொடுத்தார். 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி 7.65 என்று மோசமாக இருந்த நிலையில் சிறந்த பந்துவீச்சு 3/29 ஆக பதிவாகியுள்ளது.