புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் 2023ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் முதல் சுற்றில் சொதப்பிய நீரஜ், அடுத்ததாக 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியை நாடே கொண்டாடி வரும் சூழலில், நீரஜ் சோப்ரா வீட்டிற்கு நேற்று செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது, நீரஜ் சோப்ரா பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து தங்கம் வென்றதை எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டனர். இதற்கு நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி அளித்த பதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதில்:
அதில், “மைதானத்தில் இருக்கும்போது, எல்லாருமே விளையாட்டு வீரர்கள்தான். அதில், யாரோ ஒருவர் கண்டிப்பாக வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும். அது, பாகிஸ்தான் வீரராக இருந்தாலும் சரி, ஹரியானா வீரராக இருந்தாலும் சரி.
ஒரு தடகள வீரரை தடகள வீரராக பார்க்க வேண்டும். அவர் யாராக இருந்தாலும், எந்த நாட்டை சார்ந்தவராக இருந்தாலும். பாகிஸ்தான் வீரர் வெற்றி பெற்றதும் எனக்கு மகிழ்ச்சியே. பாகிஸ்தான் தடகள வீரர் தங்கம் பதக்கம் வெற்றி பெற்றிருந்தாலும், கொண்டாட்டம் நடந்திருக்கும்.
கடவுள் என் மகனின் ஆசைகளுக்கு ஆசி வழங்கியுள்ளார். நீரஜ் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் இதை கொண்டாடுவோம்” என்றார்.
தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நீரஜின் தாய், “இப்போது நீரஜ் சோப்ராவின் கவனம் எல்லாம் விளையாட்டின் மீதே உள்ளது. அவருக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வரும்போது, அவர் செய்து கொள்வார். நாங்கள் திருமணம் செய்துகொள்மாறு அவருக்கு எந்தவிதமான அழுத்ததையும் கொடுக்கவில்லை.” என்றும் தெரிவித்தார்.
நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு?
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை சமூக வலைத்தளங்களில் இந்தியாவே கொண்டாடி வருகிறது. தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு 70 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை கிடைத்தது. இந்த விலையை இந்திய ரூபாயில் கணக்கிட்டால் தோராயமாக 58 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு 35 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 29 லட்சம் என்றும் கூறப்படுகிறது.