இந்தியாவிலே ஆயிரக்கணக்கான கோடி வருவாயை ஈட்டித் தரும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள். இதன் காரணமாக, இந்திய அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளையும், இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்ப பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டியிடும்.


கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம்:


இந்த நிலையில், 2023ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமம் முடிவுக்கு வரும் நிலையில், 2023 -2027ம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நாளை மறுநாள் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோடி வருவாயை தரும் ஒளிபரப்பு உரிமம் என்பதால் முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமத்தை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.




நாளை மறுநாள் நடக்கும் ஏலத்தில் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற மூன்று நிறுவனங்களுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது. டிஸ்னி ஸ்டார், வியாகாம் 18 ( அம்பானியின் நிறுவனம்) மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ். இந்த மூன்று நிறுவனங்கள்தான் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற போட்டா போட்டியிட்டு வருகின்றனர்.


கடும் போட்டி:


இதில், கடந்த பல ஆண்டுகளாக டிஸ்னி ஸ்டார் மற்றும் சோனி நிறுவனங்கள் போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வியாகாம் 18( ஸ்போர்ட்ஸ் 18) நிறுவனம் கடும் போட்டி அளித்து வருகிறது. மகளிர் ஐ.பி.எல் தொடரை வியாகாம் 18 நிறுவனமே ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த மூன்று நிறுவனங்களுக்குள் உரிமத்தை கைப்பற்ற கடும் போட்டி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.


இந்த உரிமத்தை கைப்பற்றும் முயற்சியில் பிரபல  ஜீ நிறுவனம் சோனியுடன் இணைந்து களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மட்டுமின்றி ஓடிடி உரிமமும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களிலே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால் அந்த உரிமையை கைப்பற்றவும் முன்னணி நிறுவனங்கள் மோதிக்கொள்ளும்.


பல்லாயிரம் கோடி வருவாய்:




ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என்று பிரம்மாண்ட தொடர்கள் அடுத்தடுத்து அரங்கேறப்போவதால் ஏலம் நல்ல விலைக்கு போகும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. சமீபகாலமாக ஓடிடி உரிமையை பேன்கோட் நிறுவனம் கைப்பற்றி வருவதால் அவர்களும் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர். அமேசானும் இந்த உரிமத்தை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.


கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவதற்கான உரிமம் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று இந்திய துணைகண்டத்தில் நடக்கும் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை மற்றொன்று இந்திய துணைகண்டம் அல்லாத வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கான உரிமை என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஓடிடி உரிமமும் அப்படியே பிரிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கான உரிமம் என்பதால் ஆயிரக்கணக்கான கோடிகளை கொடுத்தே இந்த உரிமத்தை நிறுவனங்கள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Asia Cup 2023: ஆசியக் கோப்பையில் நீண்ட வருட காத்திருப்பு..1988க்கு பிறகு எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் இதை செய்யவில்லை!


மேலும் படிக்க: Pakistan ODI WC Jersey: 'இந்தியா' பெயருடன் வெளியான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி.. காரணம் தெரியுமா?