பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 


ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று அதாவது டிசம்பர் 16ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பந்துவீச்சை தேர்வு செய்தார். 






இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இருவரும் இணைந்து தங்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தும், பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. மதிய உணவுக்கு முன்னதாக டேவிட் வார்னர் 38 ரன்களிலும், மதிய உணவுக்கு பிறகு உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.


புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்: 


38 ரன்கள் என்ற குறுகிய இன்னிங்ஸே ஆடியிருந்தாலும் டேவிட் வார்னர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை வார்னர் படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் எடுத்தபோது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை பின்னுக்கு தள்ளினார் வார்னர். 






இப்போது அனைத்து வடிவங்களையும் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். 


ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர் யார்?


ரிக்கி பாண்டிங்: இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் பெயர் முதலிடத்தில் உள்ளது. பாண்டிங் தனது வாழ்க்கையில் மொத்தம் 559 போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் 45.84 சராசரியுடன் 27,368 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில், பாண்டிங் மொத்தம் 70 சதங்கள் மற்றும் 146 அரை சதங்கள் அடித்துள்ளார். 


டேவிட் வார்னர்: பாண்டிங்கிற்குப் பிறகு, டேவிட் வார்னரின் பெயர் இப்போது இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வார்னர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 371 போட்டிகளில் விளையாடி 42.56 சராசரியில் 18,515 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில், வார்னர் 49 சதங்கள் மற்றும் 93 அரை சதங்கள் அடித்துள்ளார்.


ஸ்டீவ் வாக்: இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்டீவ் வாக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 493 போட்டிகளில் விளையாடி 41.65 சராசரியில் 18,496 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில், ஸ்டீவ் வாக் 35 சதங்களையும் 95 அரை சதங்களையும் அடித்துள்ளார்.


அதிக ரன்கள் எடுத்த டாப் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியல்:


ரிக்கி பாண்டிங் - 27,368
டேவிட் வார்னர் - 18,502
ஸ்டீவ் வாக் -18, 496
ஆலன் பார்டர் - 17, 698
மைக்கெல் க்ளார்க் - 17,112