இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இந்த இரண்டு அணிகளின் டெஸ்ட் வரலாறும் 31 ஆண்டுகள்தான். 1992-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதுவரை இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இங்கு இந்திய அணி 15 ஆட்டங்களிலும், தென் ஆப்பிரிக்கா 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 10 முறை போட்டி டிரா ஆனது. இரு அணிகளின் தல முதல் டெஸ்ட் வரலாற்றில் என்னென்ன பெரிய சாதனைகள் உள்ளன தெரியுமா...:


1. அதிகபட்ச டீம் ஸ்கோர்: பிப்ரவரி 2010 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 643 ரன்கள் எடுத்த பிறகு தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.


2. குறைந்தபட்ச டீம் ஸ்கோர்: 1996 டிசம்பரில் டர்பன் டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 66 ரன்களுக்குள் சுருண்டது. 


3. மிகப்பெரிய வெற்றி: இதிலும் இந்திய அணியின் பெயரே முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஞ்சி டெஸ்டில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


4. மிகச்சிறிய வெற்றி: கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வான்கடே டெஸ்டில், தென்னாப்பிரிக்கா இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. 


5. அதிக ரன்கள்: சச்சின் டெண்டுல்கர் இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகளில் 1741 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை விட (1734) 7 ரன்கள் அதிகமாக அடித்து சச்சின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 


6. மிகப்பெரிய இன்னிங்ஸ்: வீரேந்திர சேவாக் இங்கு நம்பர்-1. அவர் மார்ச் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் 319 ரன்கள் குவித்தார். 






7. அதிக சதங்கள்: சச்சின் மற்றும் ஜாக் காலிஸ் இடையே இங்கு சமநிலை தொடர்கிறது. இரு நாட்டின் இரு ஜாம்பவான்களும் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.


8. அதிக விக்கெட்டுகள்: அனில் கும்ப்ளே இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகளில் 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள டேல் ஸ்டெய்ன் 65 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 


9. சிறந்த பந்துவீச்சு இன்னிங்ஸ்: தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் கடந்த 1992 டிசம்பர் மாதம்  கெபெர்ஹாவில் நடைபெற்ற டெஸ்டில் 139 ரன்கள் விட்டுகொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், நவம்பர் 2015ல் நாக்பூர் டெஸ்டில் இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் 98 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


10. மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்: கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாகப்பட்டினம் டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி 317 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்தியா -  தென்னாப்பிரிக்கா இடையே மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாக உள்ளது.