அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். குறிப்பாக, தொழில்நுட்ப துறை வளர்ச்சியடைந்த பிறகு அமெரிக்காவில் குடிபெயர்ந்து பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஜார்ஜியாவும் ஒன்றாகும்.


செனட்டர் தேர்தலில் போட்டியிடும் 2 கே கிட்:


நமது நாட்டில் மக்களவை உறுப்பினர்களை எம்.பி.க்கள் என்று அழைப்பது போல, அமெரிக்காவில் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியாவிற்கான செனட்டர் பதவிக்கு இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி போட்டியிட உள்ளார்.


அஸ்வின் ராமசாமி 24 வயதே நிரம்பியவர். இவர் ஒரு 2 கே கிட் ஆவார். அஸ்வின் ராமசாமியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐ.டி. பணிக்காக 1990 களில் அமெரிக்காவிற்காக சென்ற அவர்கள் இருவரும் அங்கேயே குடியேறிவிட்டனர். அஸ்வின் ராமசாமி பிறந்து, வளர்ந்தது அனைத்தும் ஜார்ஜியாவில் ஆகும். சிறந்த படிப்பாற்றல் கொண்ட அஸ்வின் ராமசாமி சட்டத்திலும், கணிணி பாடப்பிரிவிலும் பட்டம் பெற்றவர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் 2021ம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தவர். ஜார்ஜியாவின் செனட்டராக அஸ்வின் ராமசாமி தேர்வு செய்யப்பட்டால், கணினி மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்ற ஒரே நபர் செனட்டராக தேர்வாவது இதுவே முதன்முறை ஆகும்.


இந்துக்கள் வாக்குகளை கவர திட்டம்:


தொழில் முனைவராகவும் உள்ள அஸ்வின் ராமசாமி அமெரிக்க அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவிற்காக ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2020 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாதுகாப்பு பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.


அஸ்வின் ராமசாமி ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளார். அங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனர் இந்துக்கள் என்பதால் இந்துக்கள் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, அஸ்வின் கூறும்போது, நான் ஒரு இந்து. என் வாழ்நாள் முழுவதும் இந்திய கலாச்சார தத்துவத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.


நான் கல்லூரியில் படிக்கும்போது, நான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன். நிறைய பழங்கால நூல்களை படித்து முடித்தேன். உபநிடதங்களை படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட்டுள்ளேன். நமக்கான நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று கூறினார். ஜார்ஜியாவின் செனட்டராக அஸ்வின் ராமசாமி தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவாக பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: Rishi Sunak Video: பள்ளிகளில் போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!


மேலும் படிக்க: Srilanka Ranil WickremeSinghe : "பெரும் இழப்பை சந்தித்த தமிழர்கள்" மனம் நொந்து பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க