Cricketer Natarajan: 'சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை': கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி.

Cricket Player Natarajan Interview : தோனியிடம் விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். தோனியிடம் பேசினாலே ஒரு கூடுதல் புத்துணர்ச்சி, அவரைப் பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப் வந்துவிடும்..

Continues below advertisement

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். ஐபிஎல் போட்டியில் இளைஞர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணிகளும் ஒரு திட்டம் வைத்திருப்போம். எனக்கு தனிப்பட்ட முறையில் நான் சரியாக விளையாடுவேன் என்னும் நம்பிக்கையுள்ளது” என்றார். நடராஜன் வாழ்க்கை வரலாறு படமாக்குவது குறித்த கேள்விக்கு, ”சிவகார்த்திகேயன்தான் படத்தை எடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிரிக்கெட் போட்டிக்கு பின்னர்தான் அதைப் பற்றி யோசிக்கமுடியும்” என்றார். 

Continues below advertisement

”நான் விளையாட்டுத் துறைக்கு வந்தபின்பு, கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் கிராமத்திலிருந்து இருந்து இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர். வழி காட்டுவதற்கு ஆள் இருந்தால்தான் இளைஞர்கள் முன் வர முடியும். எனது சின்னப்பம்பட்டி கிராமத்தில் நான் வந்ததுபோல பலரையும் உருவாக்கி வருகிறேன். அதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் ஒருவர் இருப்பார். அவர்களை மறக்காமல், அவர்கள் பாதையில் அவர்களை வைத்து முன்னேற வேண்டும். இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திறமையை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன்வர வேண்டும். எதுவும் கஷ்டப்பட்டால் மட்டுமே கிடைக்கும். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் எடுத்தவுடன் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதற்கு சாத்தியமே இல்லை. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் பிரச்னைகள் எல்லாம் வரும். அதற்காக மனதளவில் தயாராகி முன் வர வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இளைஞர்களை அதிகம் அடையாளம் காட்டுகின்றனர். குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் நடத்தி வருகிறார்கள். இதில் பல மாவட்டங்களில் இருந்து பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.

சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ”எதுவும் எங்கள் கையில் இல்லை. அணிகளில் கையில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பதால் சிஎஸ்கே அணியில் விளையாட எனக்கும் ஆசை உள்ளது. தோனியிடம் விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். தோனியிடம் பேசினாலே ஒரு கூடுதல் புத்துணர்ச்சி, அவரைப் பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் வைப் வரும். டிஎன்பிஎல், ஐபிஎல் இரண்டும் எனக்கு முக்கியம்தான். இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன். ஐபிஎல் வந்தாலும் டிஎன்பிஎல் தான் என்னை அடையாளம் காட்டியது, எனவே அதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். டிஎன்பிஎல்லில் அதிக இளைஞர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர். அவர்கள் இதேபோன்று நன்றாக விளையாடினால் மென்மேலும் வளர முடியும். அதற்கு சிறந்த உதாரணம் சாய் கிஷோர். அவரைப் போன்று கிரிக்கெட்டை காதலித்து, உணர்ந்து விளையாட வேண்டும். மேலும், இந்திய அணியில் நான் மீண்டும் விளையாடுவது, இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவதைப் பொறுத்துத்தான் உள்ளது. நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவேன்" என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola