இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் சமூக, பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


'பாரதம் - இலங்கை' திட்டம்:


இலங்கை தமிழர்களுக்கு வீட்டி கட்டி தர இந்திய அரசு சார்பில் திட்டம் வகுக்கப்பட்டு, அது தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 'பாரதம் - இலங்கை' என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசின் நிதியுதவியில் 60,000 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தோட்டத்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 10,000 வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


'பாரதம் - இலங்கை' திட்டத்தின் நான்காவது கட்டமாக 45 தோட்ட எஸ்டேட்டில் 1,300 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.


"பெரும் இழப்பை சந்தித்த இலங்கை தமிழர்கள்"


அப்போது இந்தியாவுக்கு நன்றி தெரிவத்து பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, "வீடு கட்டும் திட்டத்திற்கு இந்திய அரசு பெருந்தன்மையுடன் ஆதரவளித்துள்ளது. இந்தச் செயலுக்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம், துரதிர்ஷ்டவசமாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 


 






நிலமும் வீடும் இன்றி தமிழர்கள் இருந்து வருகின்றனர். இன்று அவர்களது அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களின் பொருளாதார உரிமைகளையும் சமூக உரிமைகளையும் நிலைநிறுத்துவது இன்றியமையாதது" என்றார்.


இலங்கை தமிழர்கள் மற்றும் தோட்டப் பகுதிகளின் முன்னேற்றத்தில் இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது தொடர்பான திட்டங்களுக்கு மட்டும் இந்திய அரசு 30 பில்லியன் இலங்கை ரூபாயை ஒதுக்கியுள்ளது. மலையக பகுதியில் 14,000 வீடுகளோடு, டிக்கோயாவில் பல் சிறப்பு மருத்துவமனை கட்டி தரப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.