Rishi Sunak Video: இங்கிலாந்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கின் விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதித்த பிரிட்டன் அரசு:


பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து செல்வது அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் அதிரடி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாகவும் கவன சிதறலை குறைக்கும் விதமாகவும் பிரிட்டனில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் இடமாக பள்ளிகள் இருக்கிறது. மொபைல் போன்கள், குறைந்தபட்சம், வகுப்பறையில் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைக்கும் நமது ஆசிரியர்களுக்கு ஒரு கருவியை அளிக்கிறோம். சிறப்பாக கல்வி கற்று தர இது அவர்களுக்கு உதவுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்டுப்பாடுகள் என்ன?


மொபைல் போன்களுக்கு தடை விதித்து பிரிட்டன் கல்வித்துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், "அனைத்து பள்ளிகளிலும் நாள் முழுவதும் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.


வகுப்பறை நடக்கும் போது மட்டுமல்ல, இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சில பள்ளிகளில், மொபைல் போன்களின் பயன்பாடு தினசரி மோதலை உருவாக்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிகளை மீறும் மாணவர்கள், பள்ளி முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள். அல்லது தொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


போன் தடை தொடர்பாக வீடியோ வெளியிட்ட ரிஷி சுனக்:






இந்த நிலையில், பள்ளிகளில் செல்போன் பயன்பாடு மாணவர்களுக்கு எந்த  அளவுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்து என்பதை சுவாரஸ்மாக வீடியோவில் ரிஷி சுனக் தெரிவித்திருக்கிறார். அதன்படி, ”மூன்றில் ஒரு பங்கு மாணவர்களின் கல்வி செல்போன் பயன்பாட்டால் பாதிக்கப்படுகின்றது என்று ஆய்வில் கூறப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த கற்றல் சூழல் ஏற்படுத்துவதற்காக பல பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


நாங்களும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருக்கிறோம். அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிட்டோம். இதன் மூலம் மாணவர்கள் தகுதியான கல்வியைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரிஷி சுனக்கை நெட்டிசன்கள் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர். கிரீஞ் வீடியோ என்றும் பயனற்றது என்று விமர்சித்து வருகின்றனர். 




மேலும் படிக்க


அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பிணை.. சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!