உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. பலமிகுந்த இந்த இரு அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


அகமதாபாத்தில் இறுதிப்போட்டி:


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க ஒரு லட்சம் ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அகமதாபாத் மைதானத்தை சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சாதாரண வசதி கொண்ட தங்கும் விடுதிகளிலே ஒரு நாள் தங்குவதற்கு ரூபாய் 10 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.


தாறுமாறாக உயர்ந்த கட்டணங்கள்:


அதேபோல, நட்சத்திர அம்சங்கள் கொண்ட ஹோட்டல்களில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் மைதானத்தில் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் வியாபாரம் சூடுபிடிக்கும் என்பதால் இவ்வாறு விலை ஏறியுள்ளது.


தங்கும் விடுதிகள் மட்டுமின்றி விமான கட்டணங்களும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து இறுதிப்போட்டி நடைபெறும் நாளில் அகமதாபாத் செல்லும் விமானத்தின் கட்டணம் ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள், ஹோட்டல்களில் தங்கும் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


பலத்த பாதுகாப்பு:


ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியின்போதும் அகமதாபாத் மைதானத்தை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவும் வாய்ப்பு உள்ளதால் அகமதாபாத் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த தொடர் தொடங்கியது முதலே வெற்றியுடன் வீறுநடை போடும் இந்திய அணி, லீக் போட்டியில் ஏற்கனவே தாங்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை மீண்டும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


மேலும் படிக்க: IND Vs AUS CWC Final: உலகக் கோப்பை ஃபைனல்: 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா..! 2003 தோல்விக்கு கணக்கு தீர்க்குமா இந்தியா?


மேலும் படிக்க: Rahul Dravid: அன்று வீரன்.. இன்று ஆசான்.. உலகக் கோப்பையை முத்தமிடுவாரா ராகுல் டிராவிட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..