IND Vs AUS CWC 2023 Final: அகமதாபாத்தில் வரும் 19ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா:
அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் நடப்பு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில், இரு அணிகளும் கோப்பையை வெல்வதற்காக மல்லுக்கட்ட உள்ளன. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாகவும், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் 6வது முறையும் கோப்பையை ஏந்தும். இந்நிலையில் இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்:
கடந்த 1975ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 7 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் 1975 மற்றும் 1996ம் ஆண்டுகளில் முறையே மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. அதேநேரம், 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய 5 முறை உலகக் கோப்பையை வென்று, ஐசிசி வரலாற்றில் அதிகமுறை பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, 8வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.
- 1975ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது
- 1987ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது
- 1996ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது
- 1999ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது
- 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது
- 2007ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது
- 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்றது.
இறுதிப் போட்டிகளில் இந்திய அணி:
இந்திய அணியும் ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள சூழலில், நடப்பு உலகக் கோப்பையின் மூலம் 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் 1983 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில், 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டுள்ளது.
- 1983ம் ஆண்டு உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகளை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்றது
- 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்ட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது
- 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
2003 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எந்தவொரு இந்திய ரசிகராலும், அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ரிக்கி பாண்டிங் ருத்ரதாண்டவம் ஆடி 140 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணயாக டேமியன் மார்டின் , கில்கிறிஸ்ட் ஆகியோரும் அரைசதம் விளாச ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியோ, வெறும் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் தான், அந்த தோல்விக்கு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியின் மூலம், ஆஸ்திரேலிய அணியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.