ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் – இலங்கை இன்று பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்த இரு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ் – உஸ்மான் கானி ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் இணைந்து பவர்ப்ளேவில் 42 ரன்களை எடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த குர்பாஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் உஸ்மான் கானியும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜட்ரான் அதிரடியாக ஆடினார். ஆனாலும், அவர் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஆப்கன் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் மிடில் ஆர்டர் சொதப்ப ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர் நிசங்கா 10 ரன்களில் அவுட்டானர். சிறிது நேரத்தில் குசல் மெண்டிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அசலங்கா, மற்றொரு வீரர் டி சில்வாவிற்கு ஒத்துழைப்பு அளித்தார். அசலங்கா பொறுமையாக ஆட டி சில்வா அதிரடியாக ஆடினார். அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டியபோது அசலங்கா 19 ரன்களில் அவுட்டானார். பின்னர், களமிறங்கிய பனுகா அதிரடி காட்டினார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய தனஞ்ஜெய டி சில்வா அரைசதம் விளாசினார். வெற்றியை நெருங்கியபோது பனுகா ராஜபக்சே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 18.3 ஓவர்களில் இலங்கை 148 ரன்கள் விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சிறப்பாக ஆடிய தனஞ்ஜெய டி சில்வா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66 ரன்கள் விளாசினார்.
இந்த வெற்றி மூலம் இலங்கை அணி 4 போட்டிகளில் ஆடி 2 வெற்றி 2 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து தோற்றால் அது இலங்கைக்கு மேலும் சாதகம் ஆகும். ஆனாலும், 2வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் ஆடி 2 தோல்விகளுடன், 2 போட்டிகள் மழையால் ரத்தானதால் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க : Virat Kohli Privacy Video : வைரலான விராட் கோலியின் ஹோட்டல் அறை வீடியோ .. ஐசிசி என்ன சொல்லியிருக்கு தெரியுமா?
மேலும் படிக்க : T20 World Cup 2022: உலகக் கோப்பையில் இருந்து விலகும் தினேஷ் கார்த்திக்..? புவனேஷ்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்!