முதுகு வலி காரணமாக வருகின்ற உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, தொடக்கத்தில் 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு இணைந்த மார்க்கரம் - மில்லர் கூட்டணி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டு பந்து மீதமிருக்க தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிபெற செய்தனர்.
மார்க்கரம் 52 ரன்களில் வெளியேறினாலும், மில்லர் 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா அணி 15 வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதுகு வலியால் அவதிப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த பிசியோக்கள், உடனடி தீர்வு கொடுத்தும் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து விளையாட சிரமப்பட்டார். வலி தாங்கமுடியாமல் பெவிலியல் திரும்பினார்.
அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அடுத்த 5 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்தார். இருப்பினும் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தினேஷ் கார்த்திக் காயம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த புவி, “தினேஷ் கார்த்திக் ஏற்பட்ட காயத்தின்போது பெஞ்சில் இருந்த ரிஷப் பண்ட்டை ரெடியாக இருக்கும்படி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த அளவில் தான் எனக்கு முதலில் தகவல் தெரிந்தது. அடுத்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தினேஷ் விளையாட மாட்டார் என நினைக்கிறேன். பிசியோக்கள் தரும் ரிப்போர்ட் பொறுத்து வரும் உலகக் கோப்பை போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியும் என்றார்.