ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவம்பர் 7) நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.


முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.


உலகக் கோப்பையில் முதல் சதம்:


தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இப்ராஹிம் சத்ரான் தன்னுடைய அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்க விட்டு சதம் அடித்தார்.


இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணியில், ஒரு வீரர் கூட சதம் அடிக்காமல் இருந்தனர். இந்த சூழலில் தான் இன்றைய போட்டியில் சதம் விளாசினார் இப்ராஹிம். கடைசி வரை களத்தில் நின்ற அவர் மொத்தம் 143 பந்துகளை சந்தித்தார். அதில், 8 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இவ்வாறாக அவர் மொத்தம் 129 ரன்கள் குவித்தார்.


நம்பிக்கை கொடுத்த சச்சின்:


பின்னர் பேசிய அவர் இன்றைய போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடியதை பற்றி பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக பேசிய இப்ராஹிம் சத்ரான்,” உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக இந்த தொடரில் முதல் சதத்தை அடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த போட்டிக்காக நான் கடுமையாக பயிற்சி எடுத்தேன். முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது சதத்தை தவறவிட்டேன். ஆனால் இன்றைக்கு சாதித்துள்ளேன்.  அதேபோல், நான் எனது பயிற்சியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்த மூன்று போட்டிகளில் சதம் அடிப்பேன் என்ற உணர்வு தனக்குள் இருந்ததை அவர்களிடம் கூறினேன்.


நான் சச்சின் டெண்டுல்கருடன் நன்றாக பேசினேன். அவர் என்னிடம் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  போட்டிக்கு முன்பு நான் அவரைப் போல (சச்சின் டெண்டுல்கர்) பேட்டிங் செய்வேன் என்று கூறினேன். அவர் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுத்தார்” என்று கூறினார் இப்ராஹிம் சத்ரான்.


அதேபோல், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், “சச்சினை சந்தித்தது ஒரு சிறப்பான தருணம்.  அவரை சந்திக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருந்தது. வான்கடேவில் அவரைச் சந்திப்பது ஒரு வித்தியாசமான உணர்வு. இது எங்கள் அணியினருக்கு நிறைய நேர்மறை ஆற்றலைக் கொடுத்துள்ளது. 


ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள வீரர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. அவர் பேட்டிங் செய்வதை பார்த்து உலகம் முழுவதும் பலர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள். அவரை சந்திப்பது எங்களுக்கு கனவாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் சச்சின் டெண்டுல்கருடனான சந்திப்பை பகிர்ந்துள்ளார்.


மேலும் படிக்க: Australia Vs Afghanistan Score LIVE: 87 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா.. ஆஹா! பந்துவீச்சில் அசத்தும் ஆப்கான்!


மேலும் படிக்க: Ibrahim Zadran Century: உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கான் வீரர்! ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இப்ராஹிம்!