சையது முஷ்டாக் அலி கோப்பை:



இந்திய சீனியர் ஆடவர்களுக்கான முக்கிய உள்நாட்டு தொடரான ’ சையது முஷ்டாக் அலி கோப்பை ‘கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. 


இருபது ஓவர் ஃபார்மெட்டில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் ஐபிஎல் நட்சத்திரங்கள் தங்களது மாநில அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்கள்.  சையது முஷ்டாக் அலி டிராபி 2023 இறுதிப் போட்டி நேற்று நவம்பர் 6 ஆம் தேதி பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்றது.


ஐந்து குழுக்களில் மொத்தம் 38 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.  A, B மற்றும் C ஆகிய குழுக்களில் தலா 8 அணிகளும், E மற்றும் F ஆகிய பிரிவுகளில் தலா 7 அணிகளும் இடம்பெற்றன.


ஜெய்ப்பூர், மும்பை, ராஞ்சி, மொஹாலி மற்றும் டேராடூன் ஆகிய ஐந்து இந்திய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்றன.  சையது முஷ்டாக் அலி டிராபி 2023-ன் அனைத்து நாக் அவுட் போட்டிகளும் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்றது.


வரலாற்று வெற்றி பெற்ற பஞ்சாப் அணி:


நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற இந்த ’சையது முஷ்டாக் அலி டிராபி’-ன் இறுதிப்போட்டியில், பஞ்சாப் மற்றும் பரோடா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இதில் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அன்மோல்பிரீத் சிங் 113 ரன்கள்  குவித்தார்.






அதன்படி, வெறும் 61 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசினார். அதேபோல், பஞ்சாப் அணியின் கேப்டன் மந்தீப் சிங் 23 பந்துகளில் 32 ரன்களும், நேஹால் வதேரா 27 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என மொத்தம் 61 ரன்களை குவித்தார். 


பின்னர், வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இவ்வாறாக பஞ்சாப் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இதுவே ’சையது முஷ்டாக் அலி டிராபி’-யில் அந்த அணி பெற்ற முதல் சாம்பியன் கோப்பை ஆகும்.


ஆனந்த கண்ணீர் விட்ட மந்தீப் சிங் மனைவி:


’சையது முஷ்டாக் அலி டிராபி’- யில் பஞ்சாப் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அந்த அணியின் கேப்டன் மந்தீப் சிங்கின் மனைவி ஜக்தீப் ஜஸ்வால் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.


தன் கணவர் தங்களது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று சாம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்ததை பார்த்து ஜக்தீப் ஜஸ்வால் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத வீடியோ கட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: Australia Vs Afghanistan Score LIVE: 22 ரன்களில் வெளியேறிய அதிரடி பேட்ஸ்மேன் ஓமர்சாய்.. கடைசிநேர விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியா..!


 


மேலும் படிக்க: Shakib Ruled Out: உடல்நலக்குறைவு.. ஷகிப் அல் ஹாசனுக்கு என்ன ஆச்சு..? - உலகக் கோப்பையில் இருந்து விலகல்