ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது. மொத்தம் 48 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் 39-வது லீக் போட்டி இன்று (நவம்பர் 7) ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.


 


முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். இதில், 25 பந்துகள் களத்தில் நின்ற ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.


அதிரடி காட்டிய இப்ராஹிம் சத்ரான் :


தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இப்ராஹிம் சத்ரான் தன்னுடைய அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்க விட்டு சதம் அடித்தார்.


 


சதம் விளாசிய முதல் ஆப்கான் வீரர்:


 


இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணியில், ஒரு வீரர் கூட சதம் அடிக்காமல் இருந்தனர். தற்போது அந்த கவலையை இப்ராஹிம் சத்ரான் சரிசெய்துள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் இப்ராஹிம்.


கடைசி வரை களத்தில் நின்ற அவர் மொத்தம் 143 பந்துகளை சந்தித்தார். அதில், 8 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இவ்வாறாக அவர் மொத்தம் 129 ரன்கள் குவித்தார்.


 


கலக்கிய ரசித்கான்:


அதிரடியாக விளையாடி வந்த இப்ராஹிமுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரசித்கானும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்த போட்டியின் கடைசி சில ஓவர்களில் சிறப்பான ஷாட்டுகளை அடித்தார்.


மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் விளாசினார். அந்த வகையில் மொத்தம் 35 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது.


தற்போது 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு சேஸ் செய்வதற்கு கொஞ்சம் கடினமான இலக்காகவே இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: AUS vs AFG, Innings Highlights: சதமடித்த ஜத்ரன்.. கடைசி நேரத்தில் ரஷித் கான் சரவெடி.. ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்கு...!


 


மேலும் படிக்க: Fast Bowlers: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடப்படும் இந்திய அணி.. எதிரணியை துவம்சம் செய்யும் பும்ரா, ஷமி..!