சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டிபியில் தேசியக்கொடி படத்தை வைக்க வேண்டுகோள் விடுத்ததையடுத்து டிவிட்டரில் அதை நடைமுறைப்படுத்திய பிசிசிஐயின் ப்ளூ டிக் பறிபோனது.
பிசிசிஐ ப்ளூ டிக் பறிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) டிவிட்டர் சமூக வலைதள, வெரிஃபைடு ப்ளூ டிக் நேற்று நிறுவனத்தால் பறிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் லாடர்ஹில்லில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த கணக்கு, புளூ டிக்கை இழந்தது. ப்ளூ டிக் இல்லாத பிசிசிஐ பக்கத்தை பார்த்த ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில், இது குறித்து சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட 'தேசியக்கொடி' வேண்டுகோள் தான் என்று தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் தேசியக்கொடி வேண்டுகோள்
ஆகஸ்ட் 15, செவ்வாய்கிழமை அன்று இந்தியா 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் சமூக ஊடக தளங்களில் தங்கள் புரொஃபைல் புகைப்படத்தை, இந்திய தேசியக்கொடியாக மாற்ற வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடியும் அதே போல தனது டிபி யில் தேசியக்கொடியை வைத்துள்ளார். “#HarGharTiranga இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடக கணக்குகளின் டிபியை மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்தார்
மோடியின் வேண்டுகோள் காரணமா?
பிரதமரின் அறிவுறுத்தலின் படி, பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அதேபோல தேசியக்கொடி வைத்தது. ஆனால் சமூக ஊடக இணையதளத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு முறை DP-யை மாற்றும்போதும் வெரிஃபைடு பயனர்களுக்கு நீல நிற டிக் அகற்றப்படும். X ஆப்பில் அவர்களது கணக்கை விரைவாக மதிப்பாய்வு செய்த பின்னர் மீண்டும் அதனை மீட்க, மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஆனால் கிரே டிக் பயனர்களுக்கு இந்த விதி கிடையாது. அரசு/பல்தரப்பு அமைப்பு அல்லது அரசு/பல்தரப்பு அதிகாரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கணக்குகளுக்கு கிரே டிக் கொடுக்கப்படும். அதனால் பிரதமர் மோடியின் கிரே டிக் அகற்றப்படவில்லை.
எப்போது மீட்கப்படும்?
இலங்கையில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்துடன் மூன்று டி20 போட்டிகளில் ஆட உள்ளது. அந்த போட்டிக்கு முன்பு பிசிசிஐ மீண்டும் புளூ டிக்கைப் பெற வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஆடப்போகும் அயர்லாந்து தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா அல்லது ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் இல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அணி களமிறங்க உள்ளது.