இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது போல ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீசில் கரிபீயன் பிரிமியர் லீக் மிகவும் பிரபலம் ஆகும். இந்த தொடரின் 18வது போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணியும் பார்படாஸ் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின.


ரன் மழை:


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த செயின்ட் கிட்ஸ் அணிக்கு ப்ளெட்சர் – வில் ஸ்மித் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தனர். பவுண்டரி சிக்ஸர் என விளாசிய இவர்கள் இருவரும் அரைசதம் விளாசினர். 37 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்த ப்ளெட்சர் 56 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் அதிரடி காட்டிய வில் ஸ்மித் 36 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.




அடுத்து வந்த கூலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரூதர்போர்டு வானவேடிக்கை காட்டினார். பவுண்டரி சிக்ஸர் என அவர் விளாசியதால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கூலி 22 ரன்னில் அவுட்டாக, ரூதர்போர்டு ரன் வேட்டையைத் தொடர்ந்தார். 20 ஓவர் முடிவில் செயின்ட் கிட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தது. ரூதர்போர்ட்- 27 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 ரன்கள் விளாசினார்.


கார்ன்வெல் ருத்ரதாண்டவம்:


221 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கைல் மேயர்சும் – ரகீம் கார்ன்வெல்லும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதும் மேயர்ஸ் பவுண்டரிகளாக விளாசினார், அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 22 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த எவன்சை மறுமுனையில் வைத்துக்கொண்டு ரகீம் கார்ன்வெல் சிக்ஸர் மழையாக பொழிந்தார். அவரது பேட்டிங்கால் ரன் மளமளவென எகிறிக்கொண்டே போனது.






10.4 ஓவர்களில் 127 ரன்களை எட்டியபோது எவன்ஸ் 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் பவெலுடன் ஜோடி சேர்ந்த கார்ன்வெல் தனது சிக்ஸர் மழையை பொழிந்து கொண்டே இருந்தார். 45 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 102 ரன்களை எட்டியபோது அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். கார்ன்வெல் மட்டும் 48 பந்துகளில் 4 பவுண்டரி 12 சிக்ஸருடன் 102 ரன்களை விளாசினார்.




கடைசியில் 18.1 ஓவர்களிலே பார்படாஸ் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை விளாசி வெற்றி பெற்றது. கேப்டன் பவெல் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார்.


தன்னுடைய உடல் எடைக்காக பலமுறை விமர்சிக்கப்பட்ட கார்ன்வெல் நேற்றைய போட்டியில் தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையால் தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs NEP: வரட்டா மாமே, போன வேகத்திலேயே மும்பை திரும்பிய பும்ரா..! ஆசியக்கோப்பையும் போச்சா, என்ன பிரச்னை?


மேலும் படிக்க: Asia Cup 2023, IND Vs NEP: ஆசியக்கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா? நேபாள அணியுடன் இன்று மோதல்