இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இலங்கையில் இருந்து திடீரென மும்பை திரும்பியுள்ளார்.
ஆசியக்கோப்பை தொடர்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்தியா - நேபாளம் இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு செல்வதற்கு இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும்.
மும்பை திரும்பிய பும்ரா:
தொடரில் இந்திய அணிக்கான முக்கியமான போட்டி இன்று நடைபெறும் சூழலில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா திடீரென இலங்கையில் இருந்து புறப்பட்டு மும்பை வந்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அவர் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால், பும்ரா மீண்டும் உடனடியாக இலங்கை விரைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நேபாள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பும்ராவிற்கு பதிலாக ஷமி களமிறங்குவார் என கூறப்படுகிறது.ஏற்கனவே, தாகூர் ஓரளவிற்கு பேட்டிங் செய்வார் என்பதால், ஷமியின் இடத்தில் அவர் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டுமா?
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இந்திய அணி ஒரு ஓவரை கூட வீசவில்லை. இதனால், பும்ராவிற்கும் பந்துவீச வாய்ப்பு கிடக்கவில்லை. அதேநேரம், பேட்டிங்கில் கடைசி நேரத்தில் 16 ரன்களை சேர்த்து, வெற்றிக்கு போராடும் வகையிலான ஒரு இலக்கை இந்தியா நிர்ணயிக்க உதவினார். இந்நிலையில் தான் அவர் லீக் சுற்று முடிவதற்கு முன்பே சொந்த ஊர் திரும்பியுள்ளார். சுமார் 11 மாதங்களுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா, தொடரிலிருந்து திடீரென விலகியிருப்பது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
பும்ரா காயம்:
காயம் காரணமாக கடந்த 11 மாதங்களாக விளையாடாமல் இருந்த பும்ரா, தீவிர சிகிச்சையில் இருந்தார். பின்பு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். கேப்டனாகவும் செயல்பட்ட பும்ரா, இளம் வீரர்களை கொண்டு அந்த தொடரையும் கைப்பற்றி அசத்தினார்.