இந்திய அணி அரையிறுதி போட்டியோடு உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதை அடுத்து சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


டி20 உலகக்கோப்பை


இன்னொரு ஐசிசி நிகழ்வில் இந்தியாவுக்கு கிடைத்த மற்றுமொரு வாய்ப்பை இழந்தது. டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமான முறையில் வெளியேறியுள்ளது. ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த ஜோடி சேசிங்கில் முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் என்கிற சாதனையை செய்துள்ளது. அதுமட்டுமின்றி நான்கு ஓவர்கள் மீதமுள்ள நிலையிலேயே இந்த ரன்னை எட்டி முடித்தது. தோல்விக்கு பிறகு, இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த தோல்வி குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.



வெற்றிகரமான குரூப் ஸ்டேஜ்


கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடியது போல இல்லாமல், இவ்வருடம் குரூப் ஸ்டேஜில் இந்தியா அதிக ஆதிக்கம் செலுத்தியது. அணியின் அணுகுமுறையிலும் அதிக நம்பிக்கை தெரிந்தது. இந்திய அணி ஐந்து ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று சூப்பர் 12 இன் குரூப் 2 இல் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அங்கு அவர்கள் குரூப் 1 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்த இங்கிலாந்தை எதிர்த்துப் போட்டியிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்: பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா? ஸ்கூல் இருக்கு..! மாணவரின் கேள்விக்கு காமெடியுடன் பதிலளித்த விருதுநகர் கலெக்டர்!


இங்கிலாந்திடம் தோல்வி


இருப்பினும் வியாழன் அன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் டாப்-ஆர்டர் மைதானத்தின் குறைந்த தூர பவுண்டரிகளை தேர்வு செய்து அதிகம் பயன்படுத்தத் தவறியது. ஹர்திக் பாண்டியா அடித்த 63 ரன்கள் மட்டுமே இந்திய அணியை ஓரளவு நல்ல ஸ்கோருக்கு எடுத்து சென்றார். ஆனால் அவர்களது பேட்டிங்கிற்கு 168 ரன்கள் போதுமானதாக இல்லை. தொடர்ந்து ஆடிய, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களே 170 ரன்களை அடித்து வெற்றியை பெற்றுத்தந்தனர்.






டெண்டுல்கர் கருத்து


இந்திய அணி பந்துவீச்சு ஒரு விக்கெட் கூட எடுக்கமுடியாமல் தோல்வியை சந்தித்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். உடன் ஆடிய பட்லர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், "ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன, அதே போல் வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடினால், நம் அணியின் தோல்விகளையும் சமாளிக்க முடியும்... வாழ்க்கையில், அவை இரண்டும் கைகோர்த்துச் செல்கின்றன. #INDvsENG,” என அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு சச்சின் ட்வீட் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.