கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறையா என மாணவனின் கேள்விக்கு அம்மாவட்ட கலெக்டர் ட்விட்டரில் ஜாலியாக பதிவிட்ட கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழக,  புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.


அடுத்த மூன்று மணி நேரத்திற்கு செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தில் 23 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் உள்ள 25 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இந்தநிலையில், இன்று விடுமுறை அளிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால், ஒரு தனியார் செய்தி நிறுவனம் எப்போதோ போட்ட விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை என்ற ஸ்க்ரீன் ஷாட் நேற்று ட்ரெண்டானது. இதையடுத்து பள்ளி மாணவர் ஒருவர், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியை ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, “சார் என்ன சார் புதுசா கிளப்பிட்டு இருக்காங்க.. கன்பார்ம் பண்ணுங்க சார்” என்று பதிவிட்டு இருந்தார். 






இதை பார்த்த விருதுநகர் மாவட்ட கலெக்டர் காமெடியாக பதிலளித்தார். அதில், ”பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..? மழை இல்லை, ஸ்கூல் இருக்கு. இது தவறான செய்தி. சீக்கிரம் போய் தூங்கு, காலையில் பள்ளிக்கு போகணும். குட் நைட்” என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த பதிவை பலரும் ரீ-ட்வீட் செய்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.