2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று இன்றோடு 12 வருடங்கள் ஆகும் நிலையில் அதனை நினைவு கூறும் விதமாக அந்த தொடரின் தொடர் நாயகன் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கோப்பை வென்று 12 ஆண்டுகள்
ஐ.சி.சி. கோப்பைகளை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை இந்திய மண்ணில் வென்றது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகக்கோப்பை இந்தியாவில் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதும், தோனியின் மாஸ்டர் மைன்ட் எவ்வளவு பெரிய தாக்கம் என்பதும் காலம் போகப் போக ரசிகர்களை உணர வைக்கிறது.
அசுர ஃபார்மில் யுவராஜ்
தோனி சென்ற பிறகு ஐசிசி கோப்பை என்பது கனவாக மட்டுமே இருக்கும் இந்த வேளையில் 12 வருடம் முன்பு இதே நாளில் கோப்பையை கையில் தூக்கிய தருணங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார் யுவராஜ் சிங். எந்த அளவுக்கு தோனியின் கேப்டன்சி கோப்பையை வெல்ல அவசியமானதா இருந்ததோ அதே போல யுவராஜ் சிங் என்னும் அரக்கன் அசுர ஃபார்மில் இருந்த காலம் அது. எந்த ஒரு வீரருக்கும் கனவாக இருக்கும் உச்சபட்ச ஃபார்மை கொண்டிருந்தார் யுவி.
அசைக்கமுடியாத ஆல்ரவுண்டர்
பவுலிங்கின் போது தோனியின் துருப்புச் சீட்டாகவும் விளங்கி, பந்தை கொடுத்தபோதெல்லாம் விக்கெட் எடுத்து கொடுத்து அதகளம் செயதார். அந்த தொடரில் 362 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒரு அசைக்கமுடியாத ஆல் ரவுண்ட் வீரனாய் வலம் வந்தார் யுவி. இந்திய அணி ஆடும் போட்டிகளில் திரும்பிய திசையெல்லாம் யுவராஜ் தெரிந்தார். குறிப்பாக அயர்லாந்து அணியுடனான போட்டியில் அரை சதம் அடித்ததோடு ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார் தோனியின் படைத் தளபதி.
வீடியோவில்
இந்த நிகழ்வுகளை புகைப்படமாக தொகுத்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் அணி வீரர்களான கம்பீர், ஹர்பஜன், சேவாக், ஜாகிர் கான் ஆகியோரோடு மொத்த அணியும் வருகிறது. இடையில் ஒரு வீடியோவில் ரவி சாஸ்திரி யுவராஜ் சிங்கிற்கு தொடர் நாயகன் விருதை அறிவிக்கிறார். பின்னர் கோப்பையுடன் வீரர்கள் இருக்கும் படங்களும், டெண்டுல்கரை தோளில் சுமந்து செல்லும் படங்களும் சேர்த்து நெகிழ்வோடு வீடியோ நிறைவடைகிறது. இரண்டேகால் லட்சம் பேருக்கு மேல் பார்த்த இந்த வீடியோவை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்ததோடு, 4 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.