ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇயில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதலில் குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற போட்டி போட்டு கொண்டு வருகின்றன. இந்தியா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களமிறங்கின்றன. இந்த சூப்பர் 12 தகுதிச் சுற்று போட்டிகளில் ஸ்காட்லாந்து அணி முதல் நாளில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இன்று ஸ்காட்லாந்து அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸியை ஒரு 12 வயது சிறுமி வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதன்படி எங்களுடைய டி20 உலகக் கோப்பை ஜெர்ஸியை வடிவமைத்த 12 வயது சிறுமி ரெபேக்கா டவுனி இன்று எங்களுடைய போட்டியை முதல் முறையாக கண்டு ரசித்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளது. ரெபேக்கா டவுனி ஹாடிங்டன் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் அந்தப் பதிவில் இவ்வளவு சிறப்பாக ஜெர்ஸியை வடிவமைத்தற்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவை மேற்கோள் காட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒரு பதிவை செய்துள்ளது. அதில், "ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸி மிகவும் அசத்தலாக உள்ளது. ரெபேக்கா சிறப்பாக வடிவமைத்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளது. ஐசிசி மட்டுமல்லாது பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் 12 வயது சிறுமியின் திறமையை பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்து தங்களுடைய பதிவுகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க:'ரங்கன் வாத்தியார்'.. நன்றியை மறக்காத சென்னை சூப்பர் கிங்ஸ்!! பயிற்சியாளர் ஃபிளமிங்கை அசர வைத்த சிஎஸ்கே!