டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிக்கான முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் வரும் 24-ந் தேதி நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பெர்ஸ்டோவ் 49 ரன்களும் மொயின் அலி 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அனுபவ வீரர் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ராகுல் சாஹர் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 



இந்த ஜோடி தொடக்க முதலே இங்கிலாந்து பந்துவீச்சை வெழுத்து வாங்கியது. முதல் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் சிறப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து கே.எல்.ராகுல் 51 ரன்களுடன் மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷான் ரஷீத் வீசிய 12ஆவது ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசி தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். 




இந்திய ராகுல் விக்கெட்டிற்கு பிறகு வந்த கேப்டன் விராட் கோலி 13 பந்துகளில் 11 ரன்களில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்துகளில் இந்திய அணி வெற்றி பெற 41 ரன்கள் தேவைப்பட்டது. 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசியிருந்த போது இஷான் கிஷன் ரிடையர்டு ஹட் முறையில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். 


ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி  இந்திய அணியை வெற்றிக்கு எடுத்து செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. கடைசி 3 ஓவரில்களில் 18 பந்துகளில் இந்திய அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனால் 18 ஓவர்களின் முடிவில் இந்திய அணிக்கு 12 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா பவுண்டரி விளாசினார். அதன்பின்னர் ஜோர்டன் பீமர் நோபால் வீசினார். அது பவுண்டரி சென்றது. இதனால் 5 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் ஒரு நோபால் வீசினார். அப்போது கிடைத்த ஃப்ரீ ஹிட்டில் ரிஷப் பண்ட் சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 19 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து முதல் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றது. 


மேலும் படிக்க: 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா' : ட்விட்டரில் வைரலாகும் கோலி-தோனி படம்..