நாகை மாவட்ட மீனவர்களிடம் மீண்டும் கொள்ளையடித்து அட்டூழியம் செய்துள்ள இலங்கை கடற்கொள்ளையர்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அண்மையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் 4 மீனவர்களும் செந்தில்அரசன் என்பவருடைய பைபர் படகில் 3 மீனவர்களும் சிவபாலன் என்பவருடைய பைபர் படகில் 4 மீனவர்களும் நேற்று ஆறுகாட்டுத்துறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆறுகாட்டுத்துறையிலிருந்து கிழக்கே 22 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி உபகரணங்கள், அணிந்திருந்த ஆபரணங்கள் உள்ளிட்டவர்களை தரும்படி கேட்டு மீனவர்களை தாக்கியுள்ளனர். பாஸ்கர் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும், செந்தில்அரசன் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் 700 கிலோ வலை ஆகியவற்றையும் கைப்பற்றினர். மேலும் சிவபாலன் படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் என மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்த மீனவர்கள் பொருட்களை பறிகொடுத்த நிலையில் அதிகாலை கரை திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கர், அருள்வேல், அருள்ராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையிலும், செந்தில்அரசன், மருது, வினோத், வெற்றிவேல் உள்ளிட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 பேரை தாக்கியதில் ஒருவருக்கு தலையில் 21 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாகை மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் தெரிவித்து காயம் அடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். இத்துடன், இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தனர்.