தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை என, ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் வலியுறுத்தல்:
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை' என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்:
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். அதில் “ தமிழக உயர்கல்விமன்றம் தயாரித்துள்ள பொதுப் பாடத்திட்டத்தை, அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
’பொதுப்பாடத்திட்டம், தற்போது கல்லுாரிகள் பின்பற்றும் பாடத்திட் டத்தை விட பின்தங்கிய நிலையிலும், தரமான கல்வியில் சமரசம் செய்து கொள்வதாகவும் உள்ளது' எனவும் கவலை தெரிவித்துள்ளனர். உயர்கல்வியானது, மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி.,யிடம், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் பெறப்பட்டது.
இதற்கு, யு.ஜி.சி., தெளிவான விளக்கம் அளித்துள்ளது. 'பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள், யு.ஜி.சி. விதிகளை பின்பற்றி, தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கவும், உரிய காலத்தில் புதுப்பிக்கவும் செய்யலாம்' என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பாடத் திட்டம் குறித்து, எந்த சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல், பல்கலக்கழகங்களும், தன்னாட்சி கல்லூாரிகளும், நீங்களே உரிய சட்ட அமைப்புகளின் வழியே, பாடத்திட்டத்தை வடிவமைத்து பின்பற்றலாம். தமிழக உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன், ஆளுநர் ரவிக்கு யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ்குமார் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கையா?
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு தான் நிலவி வருகிறது. அதிகாரம் என்னிடம் இருந்தால் நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு, நான் எப்போதும் கையெழுத்து போடமாட்டேன் எனவும் ஆளுநர் பேசி இருந்தார். இதனை கண்டித்து திமுக சார்பில் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அப்போது அமைச்சர் உதயநிதி பேசும்போது ஆளுநரை கடுமையாக விமர்சித்தது பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் தான், தமிழக அரசு பரிந்துரைத்த பொதுப்பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநர் கூறியுள்ளார். முன்னதாக டி.என்.பி.எஸ்.சிக்கு புதிய தலைவரை நியமித்த தமிழக அரசின் முடிவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதன் மூலம் தமிழக அரசை ஆளுநர் பழிவாங்க முயற்சிப்பதாக திமுகவினர் சாடி வருகின்றனர்.