ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில், இந்திய வீரர் கிஷோர் ஜேனா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நீரஜ் சோப்ரா தங்கம்:
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நீச்சல், ஓட்டப்பந்தயம், துப்பாக்கிச்சுடுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடக்கிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பங்கேற்று ஆடி வருகிறது.
இந்த நிலையில், இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட இந்திய வீரர்களும், மற்ற வீரர்களும் பங்கேற்றனர். இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டியை அதிக தொலைவிற்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார்.
வெள்ளிப்பதக்கம்:
அவர் 88.88 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை வீசினார். இரண்டாவது இடத்தையும் இந்திய வீரரே பிடித்தார். இந்தியாவைச் சேர்ந்த கிஷோர் ஜேனா மொத்தம் 87.54 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை தொடர்ந்து குவித்து வருகிறது. இந்திய வீரரகள் ஈட்டி எறிதல் மட்டுமின்றி, ஓட்டப்பந்தயம், கோல்ஃப், ஹாக்கி, கிரிக்கெட் ஆகியவற்றிலும் அசத்தி வருகின்றனர்.
வரும் 8-ந் தேதியுடன் நிறைவடைய உள்ள இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 15 தங்கப்பதக்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
சீனா 161 தங்கப்பதக்கங்கள், 90 வெள்ளி, 46 வெண்கலத்துடன் 297 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 33 தங்கம், 47 வெள்ளி மற்றும் 50 வெண்கலத்துடன் 130 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கொரியா 32 தங்கம், 42 வெள்ளி மற்றும் 65 வெண்கலத்துடன் 139 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: Asian Games 2023: பதக்க வேட்டையில் இந்தியா! 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்று கலக்கிய வீராங்கனைகள்!
மேலும் படிக்க: ODI World Cup 2023: பந்தயத்துக்கு நாங்க ரெடி; உலகக்கோப்பையை ரவுண்டு கட்டிய கேப்டன்கள்; பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் வைரல்