ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக மலேசிய அணி இந்த தொடரிலிருந்து விலகியது. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதின.


இந்தப் போட்டியில் முதல் கால் பகுதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் லலீத் குமார் முதல் கோலை அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இரண்டாவது கால்பாதியில் இரு அணிகளும் நல்ல தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக யாரும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 




மூன்றாவது கால்பாதியையும் முதல் கால்பகுதியில் இந்திய அணி சிறப்பாக தொடங்கியது. மூன்றாவது கால்பாதியில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது கால் இறுதியில் இந்திய அணி தடுப்பு ஆட்டத்தில் சிறிய தவறுகளை செய்தது. இதை நன்கு பயன்படுத்திய தென்கொரியா அணி முதல் கோலை பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் அடித்தது. அந்த கால் பகுதி முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருந்தது. நான்காவது கால் பகுதியில் தொடக்கத்திலேயே தென்கொரிய வீரர்கள் ஒரு ஃபில்ட் கோல் அடித்தனர். இதன்காரணமாக 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தனர். கடைசி வரை கோல் அடிக்க இந்திய அணி எடுத்த முயற்சிகளை தென்கொரிய கோல் கீப்பர் லாவகமாக தடுத்தார். இறுதியில் 2-2 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணி இரண்டாவது முறையாக இதே மைதானத்தில் தென்கொரியா உடனான போட்டியை டிரா செய்துள்ளது. 






ஏனென்றால் கடந்த 2018ஆம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதின. அந்தப் போட்டியும் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. அதேபோல் தற்போது இந்தப் போட்டியும் டிராவில் முடிவடைந்துள்ளது. இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் சர்வதேச ஹாக்கி போட்டி இதுவாகும். மேலும் இந்தத் தொடருக்கு இந்திய அணி சில புதிய வீரர்களை களமிறக்கியுள்ளது. எனவே அவர்கள் இன்றைய போட்டியில் செய்த தவறை திருத்தி கொண்டு நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 3 முறையும்(2011,2016,2018), பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய-பாகிஸ்தான் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 2016,2018 தொடர்ந்து 2021ஆம் ஆண்டிலும் தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: அதிரடி லைக்ஸும், ரீ ட்வீட்ஸும்.. வந்தா ராஜாவாதான் வருவேன்.. தோனியை கொண்டாடிய கோலி