படம், சீரிஸ் ரிலீஸ் செய்வதில் மட்டுமே இதுவரை போட்டாப்போட்டி போட்டுவந்த ஓடிடி தளங்கள் தற்போது கட்டணக் குறைப்பில் அதே போட்டியைப் போட்டு வருகின்றன.


அதன்படி நெர்ட்ஃப்ளிக்ஸ் இந்த கட்டணக் குறைப்பு வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது. மாதாந்திர சந்தாவை 50% வரை குறைத்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். இதுவரை ரூ.699 என்றளவில் இருந்த மாதாந்திர கட்டணம் இனி ரூ.499ல் முடிந்துவிடும். இதில் இன்னொரு சலுகை என்னவென்றால் ஸ்டாண்டர் ப்ளானிலேயே இருவர் ஸ்க்ரீனை ஷேர் செய்து கொள்ள முடியும்.
ப்ரீமியம் ப்ளானில் கட்டணமானது ரூ.799ல் இருந்து ரூ.649 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 19% கட்டணம் குறைந்துள்ளது. இந்தப் ப்ளான் தான் நெட் ப்ளிக்ஸில் மிகவும் காஸ்ட்லியான ப்ளானாக இருந்தது. ப்ரீமியம் ப்ளானில் 4 பேர் ஸ்க்ரீன் ஷேர் செய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் மொபைலில் மட்டுமே பார்க்கக் கூடிய ப்ளானுக்கான கட்டணமும் ரூ.149ல் இருந்து ரூ.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது முதல் இதுவரை கட்டணக் குறைப்பே செய்ததில்லை. இந்நிலையில் அண்மையில் பல்வேறு ஓடிடி நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டுவருவதால் நெட்ஃப்ளிக்ஸும் கட்டணக் குறைப்பை செய்துள்ளது.


அமேசான் கட்டணம் எப்படி?


அமேசான் ப்ரைம் வீடியோ தனது சந்தாவை 50% அதிகரித்துள்ள நிலையில் தான் நெட்ஃப்ளிக்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதாந்திர, காலாண்டு, வருட சந்தாவும் அதிகரிக்கப்படுகிறது. டிசம்பர் 13 வரை ரூ.999க்கு வழங்கப்பட்ட ஆண்டு சந்தா இனி ரூ.1499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சந்தா ரூ.129ல் இருந்து ரூ.179 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அமேசான் ப்ரைம் காலாண்டு சந்தா என்பது ரூ.329க்குப் பதில் ரூ.459 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைமும் இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் ஆண்டு சந்தா ரூ.499 என்று அறிவிக்கப்பட்டது. 2017ல் ஆண்டு சந்தா ரூ.999 ஆனது. இப்போது இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


ஓடிடி தளங்கள் சிலவற்றின் கட்டணம்:


சோனி லைவ்: ரூ.999
ஜூ ஃபைவ்: ரூ.499
வூட்: ரூ.299
அல்ட்பாலாஜி: ரூ.300
அமேசான் ப்ரைம் வீடியோ: ரு.1499
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்: ரூ.1,499


இவ்வாறாக பல்வேறு ஓடிடி தளங்களும் தங்களின் சந்தா கட்டணங்களை மாற்றியமைத்துள்ளன. ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் கட்டணத்தை வெகுவாக குறைத்திருக்கும் சூழலில் பிரதான போட்டியாளரான அமேசான் ப்ரைம் வீடியோ மட்டும் ஏன் ஆண்டு சந்தா, மாத சந்தா என எல்லாவற்றையும் அதிகரித்துள்ளது என்பது புரியாத புதிராக உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்ற்னர்.