டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி கடந்த  ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பின்னர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.


இச்சூழலில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளும் எடுத்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. அதன்படி இரண்டு போட்டிகளையும் சேர்த்து 15 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.


இந்நிலையில், விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பாஸ்பாலுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா பூம்பாலை காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.


மேட்ச் வின்னர் பூம்பால்தான்:


இது தொடர்பாக பேசிய அஸ்வின், “இரண்டாவது டெஸ்ட் போட்டியின் உண்மையான மேட்ச் வின்னர் பூம்பால் (Boomball)தான். அதேபோல் அப்போட்டியில் நாம் யாஷ்பாலின் தாக்கத்தையும் பார்த்தோம். அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இத்தொடரில் அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக மட்டுமின்றி, உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் எனும் அந்தஸ்தையும் பெற்றுள்ளார்" என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அஸ்வின், "அவருக்கும் அவருடைய இந்த இமாலய சாதனைக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.மேலும், இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து தனது அபார வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்உண்மையில், அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை இறங்கி வந்து விளையாடியதுடன் இரட்டை சதத்திற்குப் பிறகே தனது விக்கெட்டை இழந்தார். அதேபோல சுப்மன் கில் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த சதம் பேட்ஸ்மேனாக தம்மிடம் உள்ள திறமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார்என்று கூறினார்.


மேலும் படிக்க: Rohit Sharma: மார்க் பவுச்சருக்கு பதிலடி கொடுத்த ஹிட்மேன் மனைவி! நெகிழ்ச்சியில் உறைந்த ரோகித்சர்மா!


மேலும் படிக்க: Ben Foakes: விக்கெட் கீப்பிங் செய்வதில் எம்.எஸ்.தோனியை விட கில்லாடி பென் போக்ஸ் - அலெக் ஸ்டீவர்ட்!