கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது,  இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


கர்நாடகாவில் புதிய விதியால் சர்ச்சை:


அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகளில் கன்னட பெயர்களில் பெயர்பலகை வைக்க வேண்டும் என விதி கொண்டு வரப்பட்டது. பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதமாவது கன்னட வார்த்தைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி விதி கொண்டு வந்தது. 


ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த விதி பின்பற்றப்படாமல் இருந்தது. இதனால், வடக்கு பெங்களூருவில் விதியை பின்பற்றாத கடைகளை கர்நாடகா ரக்சன வேதிகே என்ற கன்னட அமைப்பு அடித்து நொறுக்கியது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து கடைகளும் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், இந்த விதியை பின்பற்ற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 


கன்னடத்தில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளால் குழம்பும் மக்கள்:


இந்த நிலையில், விதியை பின்பற்றுவதாக கூறி பெங்களூருவில் உள்ள பல கடைகளில் தவறான அர்த்தம் கொள்ளும் வகையில் பெயர்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோரமங்கலத்தில் உள்ள ஒரு கடையின் பெயர்பலகையில் 'angadi hesaru' என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'கடையின் பெயர்' என அர்த்தம்.


கடையின் பெயரை மொழிபெயர்ப்பு செய்கிறோம் எனக் கூறி,  அப்படி மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பிடிஎம் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்தின் பெயர் பலகையில் 'Friends food is in a corner' என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்ப்பது மட்டும் இன்றி, எழுத்து பிழையுடனும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.


மரத்தஹல்லியில் ஒரு கடையில் ஸ்மோக்கர்ஸ் என எழுதுவதற்கு பதில் ஸ்ம்ரோக்கர்ஸ் என கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூருவாசி ஒருவர் கூறுகையில், "இந்திரா நகரில் முடி திருத்தம் மையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தேன். குளோபல் லீடர் இன் ஹேர் ரிஸ்டோரேசன் என அதற்கு பெயர். ரிஸ்டோரேசனை கன்னடத்தில் மொழிபெயர்க்கிறோம் என கூறி punasathapanayalle என எழுதப்பட்டுள்ளது. கன்னடத்தில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்றார்.


இதையும் படிக்க: Breaking News LIVE: இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்