இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி கடந்த  ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.


இச்சூழலில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.


தோனியை விட சிறந்தவர் பென் போக்ஸ்:


இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், பென் போக்ஸ் சிறப்பான முறையில் விக்கெட் கீப்பிங் செய்தார். அந்தவகையில் இந்த தொடரில் 6 கேட்சுகளை பிடித்துள்ளார். மேலும், இரண்டு ஸ்டம்பிங்கையும் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரெஹான் அகமதுவின் பந்துவீச்சில் இரண்டு  கேட்சுகளை பிடித்ததன் மூலம் மூத்த வீரர்களின் பாராட்டுகளை பெற்றார்.


இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அலெக் ஸ்டீவர்ட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை விட பென் போக்ஸ் தற்போது விக்கெட் கீப்பிங்கில் வேகமாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்இதுகுறித்து அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் யாராலும் செய்ய முடியாத காரியங்களை பென் போக்ஸ் செய்து வருகிறார். அவரது வேகம் எதற்கும் இணையானது. முன்பு இந்திய வீரர் எம்.எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் விரைவாக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது பென் போக்ஸ் வேகமாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்" என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "அவருக்கு இயற்கையாகவே இந்த திறமை உள்ளது என நினைக்கிறேன். ஆட்டத்தில் நிறைய சுழற்பந்து வீச்சு இருக்கும் என்பது அவருக்கு தெரியும். அதற்கான பயிற்சியை எடுக்கிறர். அவர் எப்போதும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அதனால் தான் பென் போக்ஸ் பற்றி பேசுகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பிடித்த சில கேட்சுகள் மிகவும் சிறப்பானது. அவரது கைகள் மற்றும் கால்களின் வேகத்தை பற்றி தான் நாங்கள் அதிகம் விவாதிப்போம்"என்று கூறியுள்ளார் அலெக் ஸ்டீவர்ட்.


மேலும் படிக்க: IND vs AUS U19 WC Final: 254 ரன்கள் இலக்கு! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய இளம்படை?


மேலும் படிக்க: Rohit Sharma: ”கப்பு முக்கியம் பிகிலு” - ஜூனியர் வீரர்களுக்கு வாழ்த்துகளை தட்டி விட்ட ரோகித் சர்மா