உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது செஸ் வீரர் குகேஷ்.


செஸ் சாம்பியன் தொடர் 


செஸ் சாம்பியன் தொடர் 9 சுற்றுகளாக பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆன்லைன் போட்டியாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது எட்டாவது தொடரான Aimchess Rapid போட்டிகள் அக்டோபர் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடந்து வருகிறது. இந்த தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணன், விதித், அதியா மிட்டல் என ஐந்து வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.



தொடர்ந்து இந்திய வீரர்களிடம் தோல்வி


தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இந்த ஆண்டு மேக்னஸ் கார்ல்சனை மூன்று முறை தோற்கடித்துள்ளார். மற்றொரு திறமையான இந்திய இளைஞரான அர்ஜுன் எரிகைசியும் அவரை கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் தோற்கடித்தார். மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியனானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன் ஆன இவரை, இந்திய வீரர்கள் தொடர்ந்து வென்று வருவது இந்திய வீரர்கள் பலருக்கும் நம்பிக்கையோ அளித்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Cafe Price : நல்லபடியா கேட்டா இந்த விலை... முரட்டுத்தனமாக கேட்டா இந்த விலை.. காபி கடையில் சுவாரஸ்யம்


26 மூவில் வெற்றி


ஒவ்வொரு வீரரும் மற்ற 15 வீரர்களுடன் ரவுண்ட் ராபின் முறையில் 15 சுற்றுகளாக போட்டியிட வேண்டும். அந்த வகையில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இவர் இந்த போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை எதிர்த்து போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 26-வது நகர்த்தலிலேயே கார்ல்சனை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். ஏற்கனவே கடந்த சனிக்கிழமை இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி ஏழாவது சுற்று ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் ஒருவர் கார்ல்சனை தோற்கடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.







குகேஷ் செய்த சாதனை


இந்த வெற்றி மூலம் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்கிற பெருமையை, விஸ்வநாதன் ஆனந்த், பி ஹரிக்ரிஷ்ணா, ப்ரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு பிறகு பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி குகேஷ் அவரது 16 வயதில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் கார்ல்சனை விழ்த்திய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் ஆகியுள்ளது. ஏற்கனவே இதே சாம்பியன்ஷிப்பில் முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. செஸ் சாம்பியன் தொடரில் மட்டும் மூன்று இந்திய வீரர்களிடம் வீழ்ந்துள்ளார் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். மேக்னஸ் கார்ல்சன் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில் தெலுங்கானா வீரர் வென்றபிறகு, இது முழுமையான வெற்றி இல்லை என்றார். கார்ல்சனில் இரண்டு கார்ல்சன்கள் உள்ளனர், அதிக உத்வேகத்துடன் கூடிய அந்த கார்ல்சனை வெல்ல வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.