தங்கள் வாடிக்கையாளர்கள் மீது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் செயல் எப்போதும் தொழிலுக்கு நன்மதிப்பைக் கூட்டி பாராட்டுகளைப் பெறும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து அனுப்புவது 'குட் வில்' எனப்படும் நன்மதிப்பை அதிகரித்து உயர்வுக்கு வித்திடும் என்பதை தொழில் செய்பவர்கள் நன்கு அறிந்ததால் தான், ’கஸ்டமர் ரேட்டிங் கலாச்சாரம்’ இன்று கிட்டத்தட்ட கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட அனைத்து தொழில்களிலும் முக்கியத்துவம் அளித்து பின்பற்றப்படுகிறது.
ஆனால் இதற்கு நேர்மாறாக தன்மையுடன் நடந்துகொள்ளும் நிறுவன ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகம் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
இப்படி தங்கள் கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் மோசமாக நடந்து கொள்வதைத் தவிர்க்கும் வகையிலும், வாடிக்கையாளர்களிடம் கனிவான பண்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் இங்கிலாந்தில் உள்ள கஃபே ஒன்று புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, ப்ரெஸ்டனில் உள்ள ’சாய் ஸ்டாப்’ எனும் கஃபே, கண்ணியமாக நடந்து கொள்ளாத வாடிக்கையாளர்களின் பில் தொகை இருமடங்காக வசூலிக்கப்படும் எனும் விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம், நுகர்வோர் தங்கள் ஆர்டர்களுக்கு சேவை செய்யும் கடைக்காரர்களிடம் கருணை காட்டுவதை ஊக்குவிப்பதே எனவும் அதன் உரிமையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்மான் ஹூசைன் எனும் 29 வயது இளைஞர், இந்த ஆண்டு மார்ச் மாதம் தேநீர், டோனட், ஸ்ட்ரீட் ஃபுட், இனிப்புகள் ஆகியவற்றை விற்கும் இந்த கஃபேவைத் தொடங்கியுள்ளார்.
கடை ஊழியர்களிடம் எவ்வளவு கனிவுடனும் மரியாதையுடனும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒரே பானத்துக்கு வித்தியாசமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து முன்னதாக சாய் ஸ்டாப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பதிவில், ”’தேசி சாய்’ எனக் கோரினால் ஐந்து யூரோக்களும், ‘தேசி சாய் ப்ளீஸ்’ எனக் கேட்டால் மூன்று யூரோக்களும் செலவாகும்.
’ஹலோ, தேசி சாய் ப்ளீஸ்’ எனக் கேட்டால் 1.90 யூரோக்கள் மட்டுமே செலவாகும்” என கடையில் வைக்கப்பட்டுள்ள போர்டு ஒன்றில் சாக்பீஸால் எழுதப்பட்டுள்ளது.
உணவகத்தில் ஒருபோதும் மோசமான பழக்கவழக்கமுள்ள வாடிக்கையாளர் இல்லை என்றாலும், ஓட்டலின் நல்ல ஒரு சூழல் உருவாகவும் அதனை ஊக்குவிக்கும் மக்களை ஆதரிக்கவும் இது உதவும் என ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இந்த ஐடியாவை முன்னதாக அமெரிக்க உணவகம் ஒன்றிடமிருந்து பெற்றதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விதியை அவர்கள் பின்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நம் பழக்கவழக்கங்களைக் குறித்து நினைவூட்டுவது நல்லது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் சில நேரங்களில் சில நினைவூட்டல் அவசியப்படுகின்றன" எனவும் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முரட்டுத்தனமான வாடிக்கையாளர்களுடன் ஒருபோதும் சண்டையிட்டதில்லை, ஆனால் மக்கள் நிச்சயமாக மிகவும் வெளிப்படையாக வந்து எங்களுடன் பழகி சிரிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, எனது வணிகத்தில் மிக முக்கியமான விஷயம், நம் கதவுகளை வேலை தட்ட வேண்டும்.
வீட்டுக்கு வரும் விருந்தினரைப் போல் வாடிக்கையாளர்களை நடத்த வேண்டும். இதில் மரியாதையை பரிமாறிக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது" எனவும் ஹூசைன் தெரிவித்துள்ளார்.