பொதுவாக சிலருக்கு படுத்த உடனேயே தூக்கம் வராது அவர்கள் தூங்குவதற்கு பெரும்பாடு பட வேண்டும். ஆதலால் அவர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு, இறுதியாக பல மணி நேரம் சென்ற பின்பு தான் தூங்குவார்கள் . அதுவும் தூங்கிய உடனே விடிந்து விடும். ஆகவே இரவில் தூக்கம் வராதவர்கள் இந்த ராணுவத்தினர் தூங்கும் முறையை கையாண்டால் சிறப்பான ஆழ்ந்த தூக்கம் வரும் என கூறப்படுகிறது.
குறிப்பாக ராணுவத்தினர் தமது போர் பயிற்சி களத்தில் சில நிமிடங்களிலேயே தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் . தமது எல்லைகளில் அல்லது போர் பயிற்சியின்போது அவ்வப்போது ஓய்வு எடுக்க சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவார்கள். அவ்வாறே நாமும் இந்த ராணுவத்தினரின் வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும் என கூறப்படுகிறது. பொதுவாக இராணுவத்தினர் பயிற்சிக்கு செல்லும்போது அவர்களுக்கு முதலில் வழங்கப்படும் பயிற்சியே இந்த தூங்குவதற்கான பயிற்சி தான் என சொல்லப்படுகிறது .அதாவது எந்த சூழ்நிலையிலும் ஓய்வெடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
ஆகவே அவர்கள் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குறைந்த அந்த நிமிடங்களில், எவ்வாறு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதனால்தான் ராணுவ வீரர்கள் எங்கு இருந்தாலும் போர்க்களத்தில் இருந்தாலும். இரண்டு நிமிடங்களில் தூங்கி ஓய்வெடுக்கின்றனர் .இதனால் தான் தூக்கத்திற்கு ராணுவத்தினரை முன் உதாரணமாக காட்டுகின்றனர்.
ஆகவே இந்த ராணுவத்தினர் கையாளும் முறைகளை நாமும் பின்பற்றினால் மன அழுத்தம் மனச்சோர்வு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த சிறிய ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் அவற்றிலிருந்து விடுதலை பெறலாம். நல்ல தூக்கம் என்பது மன நலன் மற்றும் உடல் நலனை பராமரிப்பதில் இன்றியமையாத ஒன்றாகும். எனினும் பலருக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது கனவில் மட்டுமே சாத்தியமாகும்
அமைதியான இயற்கை ஒலிகள் அல்லது தூக்கத்தை உணர வைக்கும் இசை, ஓய்வை இலக்காகக் கொண்ட நறுமண சிகிச்சை போன்றவற்றை பயன்படுத்தி சிலர் தூங்குவதற்கான முயற்சிகளை எடுக்கின்றனர். இருந்தபோதிலும் தூக்கத்தை வரவைக்க பல்வேறு விஷயங்களை கஷ்டப்பட்டு செய்வதை விட இயற்கையாகவே இரண்டு நிமிடங்களில் எவ்வாறு தூங்குவது என ராணுவத்தினரை முன்மாதிரியாக கொள்ளலாம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முதலாக உறங்குவதற்கான ராணுவ முறை, இணையத்தில் பரவத் தொடங்கியது. 120 வினாடிகளில் எவ்வாறு தூங்குவது என கூறப்பட்டுள்ளது.
1. முதலில் முகத்தில் உள்ள அனைத்து தசை பகுதிகளையும் தளர்த்த வேண்டும். வாய், தாடை கண்களை சுற்றி உள்ள பகுதிகளை தளர்த்தி கண்களை மூடிக்கொண்டு மெதுவாக ஆழமான சுவாசத்தை வெளிப்படுத்தவும்.
2. உங்கள் கண்கள் முற்றிலும் தளர்ந்துபோக வேண்டும், உங்கள் தோள்களில் உள்ள பதற்றம், பாரம் இறுக்கத்தை முடிந்தவரை இலகுபடுத்தி தளர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து கழுத்து பகுதியையும் இலகுவாக தளர்த்துங்கள் .
3. உங்கள் தோள்களை மெதுவாக தளர்த்தி கைகளை இரண்டு பக்கங்களிலும் தளர்வாக விழும்படி செய்ய வேண்டும்.
4. அடுத்து உங்கள் சுவாசத்தில் கவனத்தை செலுத்துங்கள். தொடர்ந்து உங்கள் மார்பு பகுதியை தளர்த்த ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
5. உடல் தளர்ந்து படுக்கைக்குச் சென்ற பின்னர், கால்கள், தொடைகள் மற்றும் கீழ கால் தசைப் பகுதிகளை தளர்த்த வேண்டும்.
6. நீங்கள் படுக்கையில் எவ்வாறு, எந்த பக்கம் திரும்பி படுக்க வேண்டும் என உங்கள் உடல் கூறுகிறதோ அந்தப் பக்கத்தில் விரும்பியவாறு உடலை தளர்த்தி தூங்க ஆரம்பிக்கலாம்.
7 .தொடர்ந்து உடலின் அனைத்து தசை பகுதிகளும் தளர்ந்த நிலையில் , அமைதியான ஒரு இயற்கை அல்லது படகில் தண்ணீரில் மிதக்கும் ஒரு காட்சியை நினைவுபடுத்திக்கொண்டு, பத்து வினாடிகளில் உங்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கவும்.
8 .தொடர்ந்து படுக்கையில் உடல் தளர்ந்த நிலையில் ,எதையும் நினைக்காதே, என்ற வார்த்தையை மனதுக்குள் 10 வினாடிகளுக்கு மீண்டும் மீண்டும் கூறியவாறு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவீர்கள்.
பொதுவாக அமெரிக்க ராணுவ விமானிகள் போர் பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னர் இந்த முறையை பின்பற்றி இரண்டு நிமிடங்களில் அது அல்லது அதற்கு குறைவான நேரத்தில் இலகுவாக தூங்க முடிந்தது என கூறப்படுகிறது. ஆகவே ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியாதவர்கள் இந்த முறைகளை பின்பற்றி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.