‛பல்து ஜன்வர்’ அதாவது வீட்டு விலங்குள் என்று பொருள். மலையாளத்தில் வெளியாகி, தற்போது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் திரைப்படம். மிதவேகம் மிக நன்று என லாரிகளின் பின்னால் எழுதியிருக்கும். அதை மலையாள சினிமாக்களில் மட்டுமே பார்க்க முடியும். மெதுவாக, நிதானமாக, நகர்ந்து, தவழ்ந்து செல்லும் திரைக்கதை அவர்களுடையது. எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால், அதன் வெற்றி ஆர்ப்பாட்டமாக இருக்கும்.


அப்படி ஒரு முயற்சியில் வெளியாகியிருக்கும் படம் தான் பல்து ஜன்வர். அனிமேஷனில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன். தன் தந்தை இறந்ததால், அனிமல்களை கவனிக்கும் கால்நடை மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிறான். அதுவும், நகரில் இருந்து, கடைகோடியில் உள்ள ஒரு மலைகிராமத்திற்கு. வீட்டுக்கு வீடு கால்நடைகள் வளர்த்து வரும் அங்கு, கால்நடை மருத்துவமனையின் சேவை மிக முக்கியமாக உள்ளது. 


விருப்பம் இல்லாத வேலைக்கு வந்து, புரியாத விஷயங்களை செய்து நொந்து கொள்ளும் அந்த இளைஞனின் மோசமான அனுபவங்களும், அனுபவத்திலிருந்து அவன் கற்க்கும் பாடமும் தான் கதை. பார்க்க டெரராக தெரியும் ஜாலியான கால்நடை டாக்டர், சிரித்து சிரித்தே வீட்டையும், நாட்டையும் ஏமாற்றும் உள்ளாட்சி பிரதிநிதி(கவுன்சிலர்), தான் பங்குத் தொகை வழங்கிய நிலையில், அரசு தரப்பில் வழங்க வேண்டிய மானியம் வழங்காமல் தனது மாட்டுக்கொட்டகை கனவு நிறைவேறாத விரக்தியில் இருக்கும் மேய்ப்பர் என மூன்று பேருடன் பயணிக்கும் அந்த இளைஞன், என்ன கதியானான் என்பதே திரைக்கதை.






டாக்டருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, அவசர நேரத்தில் காயம் அடைந்த போலீஸ் நாய்க்கு தவறான மருந்து செலுத்த, அது இறந்து போகிறது. அதனால், பொறுப்பு பணியில் இருக்கும் டாக்டருக்கும், மருத்துவ உதவியாளரான அந்த இளைஞனுக்கும் ஏற்படும் நெருக்கடி க்ளைமாக்ஸை நகர்த்துகிறது. பணி வேண்டாம் என முடிவு செய்து கிளம்பும் போது, மேய்ப்பரின் பசுக்கு ஏற்படும் சிக்கலை அந்த இளைஞன் தீர்த்து வைத்தானா? என்பதே க்ளைமாக்ஸ். 


ஒரு பாதிரியார், குறும்புக்கார கவுன்சிலர், வெள்ளந்தி கிராம வாசிகள், கறார் மேய்ப்பர் என எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பான தேர்வு. ஒரு வரி கதை தான், அதை நிறைய திரைக்கதையோடு நகர்த்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில், நீட்ட வேண்டுமே என்று நீட்டியிருப்பதாக தெரிகிறது. அது மட்டும் கொஞ்சம் தொங்கல். 


படத்தின் டெம்ப்ளெட் பார்க்கும் போது, அது ‛பஞ்சாயத்து’ வெப்சீரிஸ் உடன் நன்றாக ஒத்துப் போகிறது. ஏன், கிட்டத்தட்ட அது மாதிரி என்றே கூறலாம். ஆனால், கேரள ஃளேவர்களில் வேறு பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வினய் தாமஸ், அனீஸ் அஞ்சலியின் எழுத்தில், சங்கீத் பி ராஜனின் இயக்கம் சிறப்பு.  மருத்துவ உதவியாளராக ஃபசில் ஜோசப், அப்படியே பொருந்தியிருக்கிறார். மேய்ப்பராக வரும் ஜானி ஆண்டனியின் நடிப்பு கரடுமுரடாக பொருந்தியிருக்கிறது. 


கவுன்சிலராக வரும் இன்ட்ரான்ஸ், சமீபத்திய மலையாள படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக இந்த படத்திலும் தொடர்கிறார். டாக்டராக வரும் ஷமி திலகன் நல்ல தேர்வு. இப்படி எதார்த்த சினிமாவுக்கு தேவையான அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக பொருந்தியதால், அதுவே பாதி கடலை சினிமா தாண்ட காரணமாகிவிட்டது. ரெனதிவ் ஒளிப்பதிவும், ஜஸ்டின் வர்ஹிஸ் இசையும் படத்திற்கு கச்சிதமான தேர்வு. 


வெறும் 1.5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், ஏற்கனவே கேரள சினிமாக்களில் வெளியாகி, 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு தற்போது ஓடிடி தளத்திலும் வந்துள்ளது. அமைதியாக, ஆர்வமாக பார்க்க நினைத்தால், பல்து ஜன்வர் உங்களை குஷிப்படுத்தும்.