90 கிட்ஸ் பலருடைய வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாட்டு என்பது மிகவும் ஒட்டிப்போன ஒன்று. அவர்களின் பள்ளிப்பருவத்தில் நடைபெற்ற சிறப்பான கிரிக்கெட் போட்டிகள் என்றால் இரண்டை குறிப்பிட முடியும். ஒன்று 2001ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஃபாலோ ஆன் பெற்று கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்டில் வென்றது. மற்றொன்று 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இந்த இரண்டும் அவர்களின் கிரிக்கெட் நினைவுகளில் எப்போதும் நீங்காத இடம் பிடித்த போட்டிகள்.
2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி ஒரு அழகான சனிக்கிழமை மாலை நேரத்தில் இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையேயான நாட்வெஸ்ட் இறுதிப் போட்டில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் டிரெஸ்காதிக் 109 ரன்களும் நாசர் ஹூசேன் 115 ரன்களும் அடிக்க அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 326 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் மற்றும் கங்குலி சிறப்பான துவக்கத்தை அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 106 ரன்கள் சேர்த்தனர். முதல் 14 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. எனினும் கங்குலி 60 ரன்களுடனும், சேவாக் 45 ரன்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் களமிறங்கி தினேஷ் மோங்கியா(9), சச்சின் டெண்டுல்கர்(14),ராகுல் டிராவிட் (5) என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 24 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் ரன் விகிதம் சற்று குறைய தொடங்கிய போது யுவராஜ் சிங் தனது அதிரடியை வெளிப்படுத்த தொடங்கினார். அவர் 63 பந்துகளில் 9 பவுண்டர்கள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் ஜோடியாக சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது கைஃப் 75 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து இந்திய அணியை மகத்தான வெற்றிக்கு அழைத்து சென்றார். கைஃப் மற்றும் ஜாகிர் கான் கடைசி ரன்னை ஓடி எடுத்தவுடன் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். அப்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்த இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய ஜெர்ஸியை கழற்றி சுழற்றி ஒரு ஆக்ரோஷ்மான உணர்ச்சியை வெளிப்படுத்துவார். எப்போதும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் கங்குலியின் அணியும் அன்று ஒரு தீவிரமான போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜெர்ஸியை அவர் கலற்றும் போது அருகே இருந்த வீரர்கள் சிலர் செய்ததை கங்குலி ஒரு முறை பகிருந்து இருந்தார். அதில், "அப்போது அவரின் அருகே இருந்த லக்ஷ்மண் கங்குலியை ஜெர்ஸியை கழற்றவிடாமல் பிடித்து இழுத்துள்ளார். பின்னாடி இருந்த ஹர்பஜன் சிங் நானும் ஜெர்ஸியை கழற்றி சுற்றவா என்று கேட்டதாக" கூறியுள்ளார். இந்த சிறப்பு மிக்க வெற்றி தருணத்தை பிசிசிஐயும் ஒரு வீடியோ வெளியிட்டு தற்போது கொண்டாடியுள்ளது.
மேலும் படிக்க: 10 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய மல்யுத்த வீரர்கள் படை?