இந்தியாவின் பெயரை ”பாரத்” என மத்திய அரசு மாற்றினால் மத்திய அரசுக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.


பெயர் மாற்றும் விவகாரம்:


குடியரசு தலைவர் சார்பில் வெளியான ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அறிவிப்பு ஆகியவற்றில், வழக்கத்திற்கு மாறாக இந்தியா என்ற பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பெயரை ”பாரத்” என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. இந்நிலையில், ஒருவேளை மத்திய அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.


தனிநபர் அடையாளங்களின் நிலை என்ன?


நாட்டில் தனிநபர்கள் அடையாளம் என்பது அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெற அவசியமானதாக உள்ளது. அதன்படி வழங்கப்பட்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என அனைத்திலுமே இந்தியா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்றினால், பல கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும். இது பெரும் பொருட்செலவை ஏற்படுத்தும். அதோடு, ஏற்கனவே உள்ள இஸ்ரோ, பிசிசிஐ, எஸ்பிஐ வங்கி என பரவலாக அறியப்பட்ட, பல்வேறு அமைப்புகளின் பெயர்களும் மாற்றப்பட வேண்டி இருக்கும். மேலும், நாட்டின் பணத்தில் இந்தியா என குறிப்பிடப்பட்டு இருப்பதால், அதனை மாற்ற மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் அமலுக்கு வரலாம்.  


சர்வதேச அளவில் மாற்றம்:


இந்தியாவின் பெயரை மாற்றுவது என்பது உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பெயர் Republic of India என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தியா பெயரை மாற்றினால் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதி பெயரை மாற்ற வேண்டும். அப்போது, சர்வதேச அமைப்புகளில் இந்தியாவால் அங்கம் வகிக்க முடியும்.  பல்வேறு நாடுகள் உடனான ஒப்பந்தங்களில் இந்தியா என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் பெயரை மாற்றினால் நமது நாட்டு மக்களின் குடியுரிமை  புதிய பெயரின் அடிப்படையில் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.  ஏற்கனவே ஒப்பந்தங்கள் செய்த அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டி இருக்கும். அதுவரை இந்திய பாஸ்போர்ட் கொண்டிருப்பவர்களின் வெளிநாடு பயணம், அங்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் நிலைமை என்பது கேள்விக்குறியாகும். 


மேலும் படிக்க: Bharat Row: இந்தியாவின் பெயரை ”பாரதம்” என மாற்றலாமா? - கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?


தொழில்நுட்ப பிரச்னை:


மத்திய அரசின் பெயர் மாற்றும் நடவடிக்கை என்பது தொழில்நுட்ப ரீதியிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும். அதன்படி, இந்திய அரசின் அனைத்து அதிக்காரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் இமெயில் முகவரிகளில் .in என்றே குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் சுருக்கமே ஆகும். ஒரு வேளை பாரத் என பெயர் சூட்டப்பட்டால், .in என்ற அடையாளத்தை நம்மால் பயன்படுத்த முடியாது. மாறாக .bh என்பதை தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால்,  .bh என்பதை ஏற்கனவே பஹ்ரைன் நாடு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டிலும் சர்ச்சை:


தற்போது இந்திய அணி என்ற அடையாளத்துடனேயே நமது விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருவேளை பெயர் மாற்றம் செய்யப்பட்டால், சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க, உலக நாடுகளின் அங்கீகாரம் அவசியம். இல்லையென்றால், எந்தவொரு நாட்டையும் சாராத வீரர்களாக தான் நமது வீரர்கள் பங்கேற்க நேரிடும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், ஒலிம்பிக் ஆகிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


பணப்பரிவர்த்தனை:


இந்தியா வளர்ச்சிப் பணிகளுக்காக உலக வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகள் மட்டுமின்றி, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் கடன் வாங்கியுள்ளது. அதேநேரம், இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகள் பலவற்றிற்கும் கடன் வழங்கி உதவியுள்ளது. இதுபோன்ற பல பண பரிவர்த்தனைகளிலும் இந்தியா என்ற பெயர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை பெயர் மாற்றம் செய்யப்பட்டால் இதுவரை நடைபெற்ற பண பரிவர்த்தனைகளில் மட்டுமின்றி, உடனடியாக கடன் பெறுவதிலும் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படலாம். இதேபோன்று, பல்வேறு பிரிவுகளிலும் மத்திய அரசு ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.