தமிழ் மாதங்களில் முதல் மாதமாக இருப்பது சித்திரை ஆகும். ஒவ்வொரு மாத்திலும் வரும் பௌர்ணமி சிறப்பு என்றால், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த பௌர்ணமியே சித்ரா பௌர்ணமி என்று கொண்டாடப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி எப்போது? | Chitra Pournami 2024 Date and Time
சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமி திதி வரும் ஏப்ரல் 22ம் தேதி ( திங்கள் கிழமை) மாலை 5.55 மணிக்கு தொடங்குகிறது. பெளர்ணமி திதி அடுத்த நாளான ( செவ்வாய்கிழமை) இரவு 7.48 மணிக்கு முடிவடைகிறது. பொதுவாக, ஒரு நாள் தொடங்கும்போது என்ன திதியில் தொடங்குகிறதோ, அந்த திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். இதனால், பௌர்ணமி திதி 22ம் தேதியே பிறந்தாலும், சித்ரா பௌர்ணமி வரும் ஏப்ரல் 23ம் தேதியே கொண்டாடப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுவது ஏன்?
புராணங்களில் கூற்றுப்படி, எமலோக ராஜனான எமதர்மனின் உதவியாளராகவும், மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்திரகுப்தன். ஒரு முறை பார்வதி தேவி அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார். அப்போது, அதைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சிவபெருமானிடம் இந்த ஓவியத்திற்கு உயிர்தருமாறு கேட்டுள்ளார். பார்வதி தேவியின் வேண்டுதலுக்கு இணங்க அந்த ஓவியத்திற்கு சிவபெருமான் உயிர் அளித்துள்ளார்.
சித்திரையில் இருந்து பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் ஆவார். அந்த சித்திர குப்தன் தான் படைக்கப்பட்டது போலவே, அவரும் உயிர்களை படைக்க முயற்சித்துள்ளார். இதனால், படைக்கும் கடவுளான பிரம்மா அதிர்ச்சியடைந்து, சிவபெருமானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர், சிவபெருமான் எமலோகத்தில் மனிதர்களின் பாவ , புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை சித்திரகுப்தனிடம் ஒப்படைத்துள்ளார் என்று கூறுகிறது. அந்த சித்திரகுப்தன் அவதரித்த நாளே சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகிறது.
சித்ரா பௌர்ணமி தமிழர்கள் கொண்டாடிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான திருவிழாவாக இருந்துள்ளது. இன்று சித்ரா பௌர்ணமி பெரியளவில் கொண்டாப்படாவிட்டாலும், அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளது.
திருச்சி, நெடுங்கலாதர் கோயில் மற்றும் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் உள்ள பழங்கால கல்வெட்டுகளில் சித்ரா பௌர்ணமி பற்றிய குறிப்பு உள்ளது. மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டில் ராஜராஜ சோழன் சித்ரா பௌர்ணமிக்கு பூஜை செய்தது தொடர்பாக குறிப்புகள் உள்ளதே இதற்கு சான்றாகும்.
மேலும் படிக்க: ரம்ஜான் பண்டிகை ; பள்ளப்பட்டி ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மேலும் படிக்க: Ramadan 2024: நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை