உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலும், புத்தாடை அணிந்து ஆரத்தழுவி ரமலானை கொண்டாடினார்கள்.

 

நாடு முழுவதும் 30 நாட்கள் நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டத்தை தொடங்கினர். அதன்படி, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி  நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். அங்கு புத்தாடை அணிந்த வந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.



 

ரம்ஜான் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து மும்மதத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள 56  பள்ளிவாசல்களிலும், தர்காக்களிலும் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் சமாதானமும் சாந்தியும் உண்டாவதற்கும் பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டியும், இந்தியாவில் நல்லாட்சி அமைந்திட வேண்டிய அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதுமுள்ள தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு 7150 மெட்ரிக் டன் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கிய தமிழக அரசுக்கு இஸ்லாமியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.