பல்வேறு வகையான வண்ண, வண்ண விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு


Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரபல விநாயகர் கோயில்களான சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பிரபல விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் விநாயகருக்கு தனி சன்னதி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. 



மதுரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

 

Madurai Vinayagar Chaturthi 2024: மதுரை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடப்படும் வேளையில் வீடுகளில் மற்றும் கோயில்களில் பூஜைகள் நடத்துவதற்கான பூஜை பொருட்களை பொதுமக்கள் மதுரை மாட்டுத்தாவணி, பி.பி.குளம், தெற்குவாசல், அண்ணாநகர், கே.புதூர், ஐயர்பங்களா உள்ளிட்ட பகுதியில் உள்ள மலர்கடைகளுக்கு வருகை தந்து ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மதுரையில் உள்ள மலர் மற்றும் காய்கறி சந்தைகளிலும் சாலையோரம் உள்ள தற்காலிக கடைகளிலும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்களே ஆர்வமுடன், வருகை தருகின்றனர்.

 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிறப்பு வழிபாடு

 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் திருக்கோயிலில், 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

 

மாட்டுத்தாவணி மலர் சந்தையில நிலவரம்

 

மதுரை மலர் சந்தையில  மல்லிகைப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், வாழைக்கொத்து 50 ரூபாய்க்கும், எருக்கலம்பூ மாலை 20 ரூபாய்க்கும், அருகம்புல் கட்டு 15, மண் விநாயகர் சிலை 70 முதல் 200 ரூபாய் வரை விற்பனை, மாதுளை கிலோ 300 ரூபாய்க்கும், ஆப்பிள் கிலோ 200 ரூபாய்க்கும், பொரி படி 20க்கும் பேரிக்காய் 150 ரூபாயும், கொய்யாப்பழம் 60 ரூபாயும், விளாம்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு விட மாதுளம் பழம் விலை கிலோ 300 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது குறிப்பிடதக்கது.

 

வண்ண, வண்ண விநாயகர் சிலைகள்

 

விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தப்படும் களிமண்ணால் ஆன சிலைகள் அரை அடி முதல் இரண்டு அடி வரைக்கும் உடனுக்குடன் செய்யப்பட்டு 70 ரூபாய் முதல் 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வகையான வண்ண, வண்ண விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

 

மதுரையில் பளிச்சிட்ட வாகனங்கள்

 

மேலும் வாகனங்களையும் பூஜை செய்வதற்கு பலரும் வாகனங்களை வாட்டர் சர்வீஸ் கடைகளில் கொடுத்து சுத்தம் செய்வதும், தாங்களே சுத்தம் செய்வதென்று பிசியாக இருந்தனர். இதனால் எல்லா கடைகளில் கூட்டம் வழிந்தது.