தஞ்சாவூர்: தஞ்சை நகரில் போலீசார் அனுமதி பெற்று 85 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வழிபாடு முடிந்தவுடன் அடுத்த சில மணிநேரத்தில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு விநாயகர் சிலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் 700 இடங்களிலும், தஞ்சையில் 85 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பழைய பேருந்து நிலையம், சீனிவாசபுரம், மருத்துவக்கல்லூரிசாலை உட்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திநாளில் கொண்டாடப்படும்
ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தி தினமே ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். இது விநாயகருக்குரிய விரதங்களுள் சிறப்பான விரதமாகும். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைஒட்டி 5 அடி உயரம் முதல் 8, 10 உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு 85 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ரசாயனம் இல்லாத இயற்கை மூலப்பொருட்கள்
இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 700 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் ரசாயனம் இல்லாத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். மேலும் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் தஞ்சை நகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் உருவ சிலைகள் விற்பனை செய்யப்படடன. கடந்த ஆண்டு ரூ.30 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் இந்தாண்டு ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனையானது. களிமண் விலை உயர்வு இதற்கு காரணம் என்று உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள்
இதுமட்டுமின்றி ஒரு அடி முதல் 3 அடி வரையிலான விதவிதமான வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.6000 ஆயிரம் வரை உயரத்திற்கு தகுந்தார்போல் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்தாண்டை விட இந்தாண்டு இதன் விற்பனை மிகவும் குறைவு என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதேபோல் மளிகைக்கடைகளில் மக்கள் கும்பல் அதிகம் காணப்பட்டது. விநாயகருக்கு உகந்த நைவேத்திய பொருளான கொழுக்கட்டை செய்ய தேவையான மாவு, கொண்டைக்கடலை, தேங்காய் வாங்குவதற்கு மக்கள் மார்க்கெட் உட்பட மளிகைகடைகளில் குவிந்தனர். வாழைப்பழம் விற்பனையும் அமோக இருந்தது. வாழைப்பழத்தின் விலை மட்டும் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீசார் கூறிய அறிவுறுத்தல்
தஞ்சையில் போலீசார் அனுமதி கொடுத்தவை மட்டுமின்றி மேலும் பல இடங்களில் பொதுமக்கள் தரப்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை வழிபாடு முடிந்தவுடன் உடனே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். மூன்று நாட்கள் வரை வைத்திருக்கக்கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் மட்டுமே மூன்று நாட்கள் வைத்திருக்கலாம். அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வழிபாடு முடிந்தவுடன் ஒரு சில மணிநேரத்தில் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.