தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.


வேண்டியதை அருளும் விநாயகர்


விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்துக்களால் இறை வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்கு உரியவரும் காணாபத்தியத்தின் முழுமுதற் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகப் பெருமான் ஆவார்.


விநாயகப் பெருமானுக்கு உரிய சிறந்த விரதம்


இவரை கணபதி, லம்போதரன், பிள்ளையார், ஆனைமுகன், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றை மருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கஜமுகன், ஓங்காரன், பிரணவன் என பல பெயர்களால் இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர். விநாயகப் பெருமானுக்கு உரிய சிறந்த விரத நாட்களில் விநாயக சதுர்த்தியும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தி தினமே ‘விநாயகர் சதுர்த்தி’ ஆகும். இது விநாயகருக்குரிய விரதங்களுள் சிறப்பான விரதமாகும். 


மாதந்தோறும் சுக்கில பட்ச சதுர்த்தி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்று இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று அழைக்கின்றனர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் அழைக்கின்றனர். 


விநாயகர் உருவத்தை பார்த்து கிண்டல் செய்த சந்திரன்


கைலாயத்தில் நடந்த பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை விநாயகப்பெருமான் கையில் எடுத்துக் கொண்டு உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம் சென்றார். அப்போது பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் மோதகத்தையும் தாங்கி வந்த விநாயகப்பெருமானை கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்து கிண்டல் செய்துள்ளார். அதைப் பார்த்த விநாயகப்பெருமான் கோபம் கொண்டு, சந்திர பகவானின் அழகு கெட்டு தேய்வடையவும், அவரை காண்பவர்களும் அபவாதம் பெறுவார்கள் என்று சபித்து விட்டார்.


சந்திரன் பெற்ற சாபத்தை கண்டு வருந்திய தேவர்களும், முனிவர்களும் இந்திரனது தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார்.


விநாயகரை வணங்கி சாப விமோசனம் பெற்ற சந்திரன்


எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்திலே விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார். சாபவிமோசனம் பெறவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். அதன்படி சந்திர பகவானும் அன்றைய தினத்தில் சரிவர விரதம் அனுஷ்டித்து சாபவிமோசனம் பெற்றார். இத்தகைய சிறப்பு பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் மிகவும் உற்சாகமாகவும், பக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.