சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க்கடவுளாகவும் விளங்கியவள் வெக்காளி எனும் கொற்றவை. இவள் வெற்றியை அருளும் வீரதேவியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நீதியரசியாக, குறைகளைத் தீர்க்கும் குலதேவியாக. தீமைகளை அழிக்கும் ஸ்ரீதுர்கையாக சுருங்கச் சொல்லின் பக்தர்களின் தாயாக விளங்குபவள் வெக்காளி. உறையூர், வாகபுரி, கோழி, உறந்தை, வேதபுரம், வாரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றெல்லாம் வழங்கப்படும் உறையூர் இன்று திருச்சி மாநகரின் அங்கமாக உள்ளது. முன்பு முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கியது என்று வரலாறு சொல்கிறது. உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக இந்த வெக்காளி வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.


சாரமாமுனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வரும் காலத்தில், அந்த மலர்களை அரசனுக்காக எடுத்து சென்றுவிட்டான் பிராந்தகன் எனும் வணிகன். முனிவர் மன்னனான வன்பராந்தகனிடம் முறையிட அவன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமான சாரமாமுனிவர் தாயுமான சுவாமியிடம் முறையிட்டார். ஈசன் கோபமாகி மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார். இதனால் வீடிழந்த மக்கள், சோழர்களின் காவல் தேவியான கொற்றவையை சரண் அடைய, அவள் இந்த ஊர் மக்களின் காவலுக்காக இங்கே வெட்ட வெளியில் எழுந்தருளி மக்களைக் காத்தாளாம். அன்று அவள் அமர்ந்த இடத்திலேயே இன்னும் அருள்பாலித்துக் கொண்டு மேலே விமானமோ விதானமோ இல்லாமல் இருந்து வருகிறாள் என்கிறது கோயில் புராணம்.




வெக்காளியம்மன் சித்திரை திருவிழா தொடக்கம் 


இத்தகைய சிறப்புமிக்க உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த (ஏப்.5) மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி நடைபெற்றது. ஏப்.6-ஆம் தேதி காலை 8 மணி முதல் காலை 9 மணிக்குள் காப்புகட்டுதல் நடைபெற்றது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோயிலில் காப்புகட்டி விரதம் தொடங்கினர். 


மேலும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 7ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும்,13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும்.




சித்திரை தேரோட்டம் 


மேலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் திருநாளான ஏப்.14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சிதருகிறார். பத்தாம் திருவிழாவான ஏப்.15ஆம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. ஏப்.16 மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் ம. லட்சுமணன், செயல் அலுவலர் நா. சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.