திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் வாங்குவதற்கான ரசீதுகளை பெற, தேவஸ்தான நிர்வாகம் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு வாங்க இனி காத்திருக்க வேண்டாம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்வார்கள். அவர்களுக்கு, ஆதார் எண் அடிப்படையில், லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை போன்ற விசேஷ தினங்களில் இலவச தரிசனத்திற்கே, 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
திருப்பதி லட்டு வாங்க தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து நேரடியாக பெறலாம்
இதனால், லட்டு பிரசாதத்தை பெறவும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்பை குறைக்க தேவஸ்தான நிர்வாகம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக, இயந்திரம் மூலம் ரசீதுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தில் தரிசன டிக்கெட் எண், ஆதார் எண், செல்போன் எண், லட்டுகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் QR Code கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்து, அதற்கான கட்டணத்தை UPI யு.பி.ஐ., வாயிலாக செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
அந்த ரசீதை லட்டு வினியோகம் செய்யும் கவுன்ட்டர்களில் காண்பித்து லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுண்டரில் 5 இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைகளிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் மாதங்களில் தங்குமிடம் மற்றும் இதர சேவை மையங்கள் அருகிலும் இயந்திரங்களை நிறுவ தேவஸ்தான நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.