பஞ்சபூத ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும், திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து அலங்கார மாலைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா கார்த்திகை மாத பௌர்ணமியன்று நடைபெறுவது வழக்கம்.



 

இவ்விழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும் போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில், உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்து அம்மாலைகளே சாற்றப்படுகின்றது.



 

இந்த அலங்கார மாலைகளை திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வி.கே.குமாரகாளத்தி குத்து விளக்கேற்றி வைத்தும், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகளுக்கு தீபாராதனைகளும் காண்பித்தார். 

 



 

பின்னர் இந்த மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தலைவர் வி.கே.குமாரகாளத்தி கூறுகையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத்திற்கு, தொடர்ந்து 160 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம் ஜவுளிக்கடை சத்திரத்திரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மாலைகளை வழங்கி வருகிறோம். இதற்காக திங்கட்கிழமை அதிகாலையிலிருந்து, மாலை வரை செவிலிமேடு நாகேஷ் என்பவர் தலைமையில் 35 பேர் சேர்ந்து அலங்கார மாலைகளை உருவாக்கினார்கள்.

 



 

ஒவ்வொரு ஆண்டும் மாலைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் மாலையின் உயரம் 7 அடியாகும். இதை மரக்கா ( பாரம்பரிய பெயர்) மாலைகள் என்பார்கள். இம்மாலைகளின் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சமாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர் பி.மாணிக்கவேல் உட்பட சங்க நிர்வாகிகள், மேலாளர் உட்பட பலரும் உடன் இருந்தனர். 160 ஆண்டுகளாக இந்த மாலை அனுப்பும் விழாவானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இந்த மாலையினை பார்ப்பதற்காக ஏராளமான அப்பகுதியில் குவிந்து மாலையை தரிசித்து விட்டு சென்றனர்.