திருப்பாவை இருபத்து மூன்றாவது பாடல் விளக்கம்:
மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து இரண்டாவது பாடல் மூலம் கூற வருவதை காண்போம்.
மழை பொழியும் காலங்களில், குகையினுள் சிங்கமானது உறங்கி கொண்டிருக்கும். மழை பொழிந்து முடிந்தவுடன், கண்களை உருட்டி விழித்து கொண்டும், பிடரியை குலுங்கும்படி சிலிர்த்துக்கொண்டும், முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியே வரும்.
அந்த சிங்கம் போல, உறங்குகின்ற காயம்பூ நிறமுடைய கண்ணனே, சிங்கம் போல எழுந்து வெளியே வருவாயாக…
நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை அறிந்து அருள் தருவாயாக என ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.
திருப்பாவை இருபத்து மூன்றாவது பாடல்:
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
Also Read: Thiruppavai 22: மார்கழி 22... ‘நான்தான் பெரியவன் என்ற அகங்காரம் கூடாது’ - உணர்த்தும் திருப்பாவை!..